ADDED : பிப் 22, 2024 01:32 AM

புதுடில்லி:இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான 'விப்ரோ' சிப் வடிவமைப்புகளுக்கான கண்டுபிடிப்புகளை 'இன்டெல்' நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, பங்குச் சந்தைகளுக்கு வழங்கிய குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
இன்டெல்லின் '18ஏ' வகை சிப் உட்பட, அந்நிறுவனத்தின் மிகவும் மேம்பட்ட சிப் வடிவமைப்பு கண்டுபிடிப்புகளில், விப்ரோவும் இணைந்து செயல்படும். செயற்கை நுண்ணறிவு சிப்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், இந்த கூட்டு முக்கியமானதாகும்.இவ்வாறு தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரியில் இந்தியாவின் மற்றொரு தகவல் தொழில்நுட்ப நிறுவனமான எச்.சி.எல்., தைவானின் 'பாக்ஸ்கான்' நிறுவனத்துடன் இணைந்து, 'செமிகண்டக்டர்' ஆலை அமைப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டது. மேலும், 'டாடா குழுமம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' போன்ற முன்னணி நிறுவனங்களும் இந்த துறையில் வாய்ப்புகளை ஆராய்ந்து வருகின்றன.