சீனாவிலிருந்து நுரைப்பஞ்சு குவிப்பு குறித்து விசாரணை
சீனாவிலிருந்து நுரைப்பஞ்சு குவிப்பு குறித்து விசாரணை
ADDED : மார் 21, 2025 11:27 PM

புதுடில்லி; சீனா மற்றும் தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும், தலையணைகளில் திணிக்கப்படும் நுரைப்பஞ்சுகளுக்கு எதிராக, பொருள் குவிப்பு தடுப்பு விசாரணை துவங்கப்பட்டுள்ளது.
மணாலி பெட்ரோ கெமிக்கல்ஸ் என்ற நிறுவனம் அளித்த புகாரின் பேரில், டி.ஜி.டி.ஆர்., எனும் வர்த்தக தீர்வுகளுக்கான பொது இயக்குனரகம் இந்த விசாரணையை துவங்கியுள்ளது.
எப்.எஸ்.பி., எனும் 'பிலெக்சிபிள் ஸ்லாப்ஸ்டாக் பாலியோல்' என்பது ஒரு வகையான நுரைப்பஞ்சு. இது, மெத்தைகள், தலையணைகள், போக்குவரத்து இருக்கைகள் உள்ளிட்டவற்றில் திணிக்க பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், சீனா மற்றும் தாய்லாந்து நாடுகளில் இருந்து குறைந்த விலையில் இவை இறக்குமதி செய்யப்படுவதால், உள்நாட்டு தொழில்துறையினர் பாதிக்கப்படுவதாக கூறி, மணாலி நிறுவனம் புகார் தெரிவித்திருந்தது.
இந்தியாவில், இந்நிறுவனம் மட்டுமே எப்.எஸ்.பி., உற்பத்தி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, நிறுவனம் அளித்த புகாரில், போதுமான ஆதாரங்கள் இருப்பதாக கூறி, டி.ஜி.டி.ஆர்., விசாரணையை துவங்கியுள்ளது.
புகாருக்கு உள்ளான காலத்தில், அதிக அளவில் நுரைப்பஞ்சு இறக்குமதி செய்து குவிக்கப்பட்டிருப்பது உறுதியானதாகவும், இதனால் உள்நாட்டு வர்த்தகம் பாதிக்கப்பட்டதன் முகாந்திரம் இருப்பதாகவும் டி.ஜி.டி.ஆர்., தெரிவித்து உள்ளது.