ADDED : டிச 20, 2024 12:13 AM

புதுடில்லி:நடப்பாண்டில் கடந்த நவம்பர் மாதம் வரை, 205 புதிய மியூச்சுவல் பண்டு திட்டங்களை அறிமுகப்படுத்தி, அதன் வாயிலாக 1.04 லட்சம் கோடி ரூபாய் முதலீடு திரட்டப்பட்டு உள்ளதாக, 'ஆம்பி' எனும் இந்திய மியூச்சுவல் பண்டுகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நடப்பாண்டில், 'இண்டெக்ஸ் பண்டு' பிரிவிலேயே அதிக திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.
நிப்டி, சென்செக்ஸ் போன்ற பங்கு சந்தை குறியீடுகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் திட்டங்களே இண்டெக்ஸ் பண்டு என அழைக்கப்படுகின்றன.
இப்பிரிவில் 76 திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, 11,896 கோடி ரூபாய் முதலீடு திரட்டப்பட்டுள்ளது. அதிகபட்சமாக அக்டோபர் மாதத்தில் 17 இண்டெக்ஸ் பண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கு அடுத்தபடியாக, பிற இ.டி.எப்., பண்டுகள் பிரிவில் 41 திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் வாயிலாக 1,438 கோடி ரூபாய் முதலீடு திரட்டப்பட்டுள்ளது.
மதிப்பின் அடிப்படையில் செக்டோரல், திமேட்டிக் பண்டுகள் பிரிவில் அதிகபட்சமாக 67,772 கோடி ரூபாய் முதலீடு திரட்டப்பட்டுள்ளது.