பட்டன் போனிலும் பணம் அனுப்பலாம் ஐ.ஓ.பி., விரைவில் புதிய யு.பி.ஐ., சேவை
பட்டன் போனிலும் பணம் அனுப்பலாம் ஐ.ஓ.பி., விரைவில் புதிய யு.பி.ஐ., சேவை
ADDED : நவ 08, 2025 03:46 AM

புதுடில்லி: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, வாய்ஸ் பேஸ்டு எனப்படும் குரல் அடிப்படையிலான யு.பி.ஐ., பரிவர்த்தனை சேவையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
இதற்காக நிதி தொழில்நுட்ப நிறுவனமான நெட்நொர்க் பீப்புள் சர்வீசஸ் டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. என்.பி.எஸ்.டி., எனும் இந்நிறுவனம், மிஸ்கால்பே எனும் டிஜிட்டல் பேமென்ட் தளத்து டன் இணைந்து இந்த சேவையை வழங்க உள்ளது.
நம் நாட்டில் சமீபத்திய தரவுகளின்படி, 50 கோடி பேர் யு.பி.ஐ., பயன்படுத்துகின்றனர். எனினும், பட்டன் போன் வைத்திருப்பவர்கள், டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ள தெரியாதவர்கள் மற்றும் இணைய வசதி இல்லாத நாட்டின் தொலைதுார பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இதை அணுகுவது இன்னும் சிரமமாகவே உள்ளது.
எனவே, கிட்டத்தட்ட 8 5 கோடி பேர் யு.பி.ஐ., கட்டமைப்புக்கு வெளியில் உள்ளனர். இவர்களையும் டிஜிட்டல் பேமென்ட் கட்டமைப்புக்குள் கொண்டு வருவதற்காக ரிசர்வ் வங்கியும், என்.பி.சி.ஐ., எனும் தேசிய பணப் பரிவர்த்தனை கழகமும் இணைந்து, 'யு.பி.ஐ., 123 பே' என்ற சேவையை 2022ல் அறிமுகப்படுத்தின.
இந்த சேவையை பயன்படுத்த இணையவசதி கூட அவசியமில்லை.
இந்நிலையில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தன் வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

