சொத்துப்பதிவு நடைமுறையை எளிதாக்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தல்
சொத்துப்பதிவு நடைமுறையை எளிதாக்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தல்
UPDATED : நவ 09, 2025 01:46 AM
ADDED : நவ 09, 2025 01:18 AM

புதுடில்லி: இந்தியாவில் சொத்து வாங்குவது என்பது துன்பகரமானதாக இருப்பதாக மக்கள் கூறுகின்றனர். எனவே, பிளாக்செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சொத்து பதிவு நடைமுறையை எளிமையாக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.
பீஹாரில் பட்டா மாற்றம் தொடர்பான ஆவணங் கள் இல்லாவிட்டால், பதிவை மறுக்கும் அதிகாரத்தை பதிவாளர்களுக்கு வழங்கும் 2008ம் ஆண்டின் பதிவுச்சட்டம் - 19 விதியை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இதன் வாயிலாக, சட்ட விதிகள், அடிப்படை பதிவு கடமைகளிலிருந்து விலகி, உரிமை சர்ச்சைகளில் தலையிடக் கூடாது என, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்ஹா மற்றும் ஜோய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டு உள்ளது.
இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பில் உச்ச நீதிமன்ற அமர்வு, தற்போதைய நடைமுறையானது, காலனி ஆதிக்க காலத்தின் சட்டங்களை கொண்டிருப்பதால், குழப்பத்தையும், திறமையின்மை மற்றும் அதிக எண்ணிக்கையிலான வழக்குகளை உருவாக்கி உள்ளது என்று கூறியுள்ளது.
எனவே, இந்தியாவின் ஒட்டுமொத்த சொத்துப்பதிவு, பட்டா முறையை முழுமையாக மாற்றி, வளர்ந்து வரும் பிளாக் செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, நவீனமயமாக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
பிளாக் செயின்
என்றால் என்ன?
பிளாக் செயின் என்பது பரவலான, பாதுகாப்பான டிஜிட்டல் தரவுத்தளமாகும். இது பரிவர்த்தனைகளை குறிப்பிட்ட வடிவத்தில் பதிவு செய்து, பேரேடு போன்று செயல்படுகிறது. இதன் வாயிலாக, பல கணினிகளில் உள்ள தரவுகள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு ஒருமித்த கருத்துடன் அங்கீகரிக்கப்படும். இதில் தரவுகள் மாற்றம் செய்வது, ஹேக் செய் வது கடினமாகும். கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைக்கு இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

