ADDED : ஜூலை 12, 2025 10:38 PM

புதுடில்லி:ஆப்பிள் ஐபோன் தயாரிப்பாளரான பாக்ஸ்கான் நிறுவனம், ஐபோன் 17 பாகங்களை சீனாவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, இம்மாதம் சோதனை முறையிலான ஐபோன் 17 உற்பத்தி துவங்கும் என கூறப்படுகிறது.
பாக்ஸ்கான் ஆலைகளில் உற்பத்தியை நிர்வகித்து வந்த நுாற்றுக்கணக்கான சீன பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், நிறுவனத்தின் அழைப்பின் பேரில், சீனாவுக்கு சென்ற நிலையில், ஐபோன் 17 மாடல், இந்தியாவில் உற்பத்தியாகுமா என்ற சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில், ஐபோன் 17 மாடலுக்கான டிஸ்பிளே, கவர் கிளாஸ், பின் பக்க கேமரா மாட்யூல்கள் உள்ளிட்ட முக்கிய பாகங்களை பாக்ஸ்கான் நிறுவனம் இறக்குமதி செய்யத் துவங்கியுள்ளது. சுங்கத்துறை தரவுகளின் படி, பாக்ஸ்கான், கடந்த மாதம் சீனாவிலிருந்து இறக்குமதி செய்த உதிரி பாகங்களில் 10 சதவீதம், ஐபோன் 17 சம்பந்தப்பட்டது என தெரிய வந்துள்ளது.
ஐபோன் 17 மாடலை பொறுத்தவரை சீனாவிலும், இந்தியாவிலும் ஒரு நேரத்தில் அறிமுகம் செய்ய ஆப்பிள் முடிவு செய்துள்ளது. இதன்படி, இம்மாதம் சோதனை முறையிலான உற்பத்தி நடைபெறும் எனவும், அடுத்த மாதம் முதல் முழு அளவிலான உற்பத்தி துவங்கும் என்றும் கூறப்படுகிறது. செப்டம்பர் மாதத்தில் ஐபோன் 17 மாடலை அறிமுகப்படுத்த ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.