ADDED : செப் 07, 2025 11:23 PM

புதுடில்லி:பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு, ஆன்லைன் வாயிலாக பயிற்சி அளித்து வரும் பிசிக்ஸ்வாலா, புதிய பங்கு வெளியீடு வாயிலாக 3,820 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட, செபியிடம் விண்ணப்பித்து உள்ளது.
நொய்டாவை தலைமையிடமாக கொண்ட இந்நிறுவனம், கடந்த மார்ச்சில் ரகசிய விண்ணப்ப முறையில் விண்ணப்பித்து இருந்தது. ஜூலையில் செபியின் ஒப்புதல் கிடைத்தது.
இந்நிலையில், தற்போது புதுப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளது. அதில், முதலீட்டாளர்களின் பங்குகள் விற்பனை வாயிலாக 720 கோடி ரூபாயும்; புதிய பங்கு விற்பனை வாயிலாக 3,100 கோடி ரூபாயும் திரட்ட திட்டமிட்டு உள்ள தாக தெரிவித்துள்ளது.
புதிய பங்கு விற்பனை வாயிலாக திரட்டப்படும் தொகையில் 461 கோடி ரூபாய், புதிய பயிற்சி மையங்கள் அமைக்கவும்; 548 கோடி ரூபாய், ஏற்கனவே உள்ள பயிற்சி மையங்களுக்கான குத்தகை தொகையை செலுத்தவும் பயன்படுத்த உள்ளது.
கடந்த 2025 ஜூன் 30 நிலவரப்படி, பிசிக்ஸ்வாலாவுக்கு சொந்தமான யு டியூப் சேனல்களில், 9.88 கோடி பேர் சந்தாதாரர்களாக உள்ளனர். பிசிக்ஸ்வாலா ஆன்லைன் மட்டுமின்றி, போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு நேரடி பயிற்சி மையங்களை அமைப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.