மார்பிள், கிரானைட் ஜி.எஸ்.டி., 5% செங்கல்லுக்கு 12 சதவீத வரியா? உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு
மார்பிள், கிரானைட் ஜி.எஸ்.டி., 5% செங்கல்லுக்கு 12 சதவீத வரியா? உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு
ADDED : நவ 10, 2025 11:56 PM

மதுரை: இந்தியாவில் 12 சதவீதம் என்ற ஜி.எஸ்.டி., வரி விகிதமே இல்லாத நிலையில், செங்கல்லுக்கு 6 சதவீதம், 12 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இதை மார்பிள், கிரானைட் கற்களுக்கு போல, 5 சதவீதமாக மாற்ற வேண்டும் என, தமிழ்நாடு செங்கல் உற்பத்தியாளர் சங்க கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.
அனைத்து வகை பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி., வரிவிதிப்பின் கீழ் 5 சதவீதம் முதல் 28 சதவீதம் வரை விதிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் வரிசீரமைப்பு செய்யப்பட்டது. தற்போது 5 சதவீதம், 18 சதவீதம் என்ற இரண்டு விகிதத்தில் வரி விதிக்கப்படுகிறது.
இந்தியாவில் 12 சதவீத ஜி.எஸ்.டி., வரி விதிப்பே இப்போது இல்லாத நிலையில் செங்கல், பிளைஆஷ் செங்கல்லுக்கு மட்டும் இரண்டு விதமான வரி விதிக்கப்படுவதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதன் துணைத் தலைவர் ஜெயராஜ் கூறியதாவது:
ஜி.எஸ்.டி., அமல்படுத்துவதற்கு முன், ஒரு மாத செங்கல் உற்பத்திக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட தொகையை 'காம்பவுண்டிங்' வரியாக விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம்.
தமிழ்நாடு, உத்தர பிரதேசம், பீஹார் உட்பட எட்டு மாநிலங்களில் இந்த நடைமுறை இருந்தது.
இந்த தொகையை செலுத்தினால், வரி பராமரிப்பு கூட செய்ய வேண்டியதில்லை. அதைத்தான் ஜி.எஸ்.டி., வரிவிதிப்பிலும் கேட்டோம்.
அதற்கு பதிலாக 'ஸ்பெஷல் காம்பவுண்டிங்' என்ற பெயரில் 5 சதவீதமாக இருந்த வரியை 6 சதவீதம் என்றும் உள்ளீட்டு வரியுடன் 12 சதவீதமாகவும் மாற்றியது மத்திய அரசு.
மூன்றாண்டுகளாக கோரிக்கை வைத்தும் இதுவரை பலனில்லை. எல்லா பொருட்களும் 5 சதவீதம், 12 சதவீதம் என்ற வரிக்கு மாற்றப்பட்ட நிலையில் செங்கல், பிளைஆஷ் செங்கல்லுக்கு மட்டும் 6 சதவீதம், 12 சதவீத வரியே நீடிக்கிறது. அதை 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

