ADDED : செப் 14, 2025 08:26 PM

பொருட்களை வாங்குவதை எளிதாக்கினாலும், விலையில்லா தவணை வசதி தொடர்பான முக்கிய அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பண்டிகை காலம் துவங்கியுள்ள நிலையில், வர்த்தக நிறுவனங்கள் பல்வேறு சலுகை திட்டங்களையும், தள்ளுபடிகளையும் அறிவித்து வருகின்றன. இ- - காமர்ஸ் நிறுவனங்களும் நுகர்வோரை கவர்ந்திழுக்கும் வகையில் பல்வேறு சலுகை திட்டங்களுடன் தயாராக உள்ளன.
இவற்றுக்கு மத்தியில், நோ - காஸ்ட் இ.எம்.ஐ., என சொல்லப்படும் விலையில்லா தவணை முறையில் பெரிய பொருட்களை வாங்குவதற்கான அறிவிப்புகளும் கவர்ந்திழுக்கின்றன.
வட்டி உண்டு
விலையில்லா தவணை என்பது, பொருட்களை தவணை முறையில் வாங்கும் வசதியை குறிக்கிறது. வாங்கும் போதே மொத்த விலையும் கொடுக்க முடியாதவர்கள், பொருளை வாங்கிக் கொண்டு அதற்கான விலையை குறிப்பிட்ட தவணைகளில் செலுத்தும் வகையில் இந்த வசதி அமைகிறது.
இப்படி தவணை முறையில் தொகையை செலுத்த வழக்கமாக பொருந்தும் வட்டி விகிதம் இல்லை என்பதால், விலையில்லா தவணை என இந்த வசதி குறிப்பிடப்படுகிறது. ஆனால், உண்மையில் இது விலையில்லாத வசதி தானா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
விலையில்லா தவணை என்பது வட்டி இல்லா தவணை என குறிப்பிடப்பட்டாலும், உண்மையில் வட்டி இருக்கிறது. இது மறைந்திருக்கிறது என்பது மட்டும் அல்ல, இதற்கான விலையை யாரோ ஒருவர் ஏற்றுக்கொள்கிறார். அது உற்பத்தி நிறுவனமாக அல்லது விற்பனையாளராக இருக்கலாம். ஏன், நுகர்வோராக கூட இருக்கலாம்.
தவணை முறையில் பொருளை வாங்க வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் கடன் கொடுக்கின்றன. ஆனால், இதை வட்டி இல்லாமல் வழங்க முடியாது. ரிசர்வ் வங்கி நிபந்தனைகள் இதில் தெளிவாக உள்ளன.
கவனம் தேவை
விற்பனையை அதிகரிக்க நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்கள் வங்கிகளுடன் இணைந்து, விலையில்லா தவணை வசதியை அளிக்கின்றனர். பல நேரங்களில் வட்டி தொகை விற்பனையாளரால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. விற்பனையாளர்கள் தங்கள் கமிஷன் தொகையில் இருந்து இதை வங்கிக்கு அளித்து விட்டு, விலையில்லா சலுகையாக முன்வைக்கின்றனர்.
சில நேரங்களில் உற்பத்தி நிறுவனங்கள் இந்த தொகையை ஏற்றுக் கொள்ளலாம். விற்பனை உத்தியாக அளிக்கப்படும் தள்ளுபடியில் இந்த தொகை கழித்துக் கொள்ளப்படலாம்.
நுகர்வோர் மொத்தமாக விலை கொடுத்து வாங்கினால், தள்ளுபடி சலுகையை பெறலாம். தவணை வசதியை நாடும் போது இந்த சலுகையை இழக்க நேரலாம்.
இன்னும் சில நேரங்களில், தவணை சலுகைக்கான தொகை, செயல்முறை கட்டணம் போன்றவை வழியாக நுகர்வோரிடம் இருந்தே வசூலிக்கப்படலாம். மேலும், குறிப்பிட்ட கால அளவு அல்லது குறிப்பிட்ட பொருட்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும்.
அதிக கால தவணையில் பொருளை வாங்க விரும்பினால், வட்டி மூலம் கூடுதலாக தொகை செலுத்த வேண்டியிருக்கும்.
மொத்த தொகையை முதலில் செலுத்த முடியாத நேரங்களில் தவணை சலுகையை நாடுவதில் தவறில்லை. ஆனால், இந்த சலுகை உண்மையில் பலனுள்ளதாக அமைவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
அதே பொருள் மற்ற இடங்களில் தள்ளுபடியில் கிடைக்கிறதா என பார்க்க வேண்டும். விதிகள், நிபந்தனைகள், கட்டணங்களை கவனிக்க வேண்டும். தேவையான பொருட்களை மட்டுமே இந்த முறையில் வாங்க வேண்டும்.