ADDED : பிப் 16, 2025 08:18 PM

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வரிச்சலுகை காரணமாக, பலரது கைகளில் அதிக பணம் இருக்கும் என கருதப்படுகிறது. இந்த கூடுதல் பணம், நுகர்வை அதிகமாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார சூழலில் இதனால் ஏற்படக்கூடிய தாக்கம் ஒரு பக்கம் இருக்க, நுகர்வு அதிகரிக்க வாய்ப்புஇருப்பது, நுகர்வு சார்ந்த பங்குகள் மற்றும் நிதிகள் மீதான கவனத்தை அதிகமாக்கி உள்ளது.
தற்போது மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் 30 க்கும் மேற்பட்ட நுகர்வு சார்ந்த நிதிகளை வழங்குகின்றன. நுகர்வு சார்ந்த நிதிகளில் முதலீடு செய்யும் போது மனதில் கொள்ள வேண்டிய அம்சங்கள்:
நுகர்வு நிதிகள்:
மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள், பல்வேறு குறிப்பிட்ட கருப்பொருள் சார்ந்த நிதிகளை வழங்கி வருகின்றன. இவற்றில், நுகர்வோர் பொருட்கள், ஆட்டோமொபைல், வாடிக்கையாளர் சேவை, தொலைத்தொடர்பு, எரிசக்தி, ரியாலிட்டி உள்ளிட்ட பரவலான தன்மை கொண்டவையாக நுகர்வு நிதிகள் அமைகின்றன.
அதிக வருமானம்:
பட்ஜெட் சலுகை காரணமாக, நுகர்வு துறையில் பரவலான தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த விலை நுகர்வு பொருட்கள், பயண துறை, நகைகள், துரித சேவை ரெஸ்டாரண்ட்கள், ஆடைகள் துறை உள்ளிட்டவை பலன் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்ட காலம்:
நுகர்வு துறையின் ஏறுமுகம் நீண்ட கால தாக்கம் கொண்டிருக்கும் என கருதப்படுகிறது. அதிக வருமானம், நகரமயமாக்கல், டிஜிட்டல்மயம் உள்ளிட்டை இதற்கு காரணமாகின்றன. இந்தியாவின் இளம் மக்கள் தொகையும் நுகர்வு துறைக்கு சாதகமாக அமைகிறது. நுகர்வு பங்குகளும் கவனத்தை ஈர்ப்பதாக அமைகின்றன.
இடர் அம்சம்:
அண்மை கால போக்குகள் நுகர்வுக்கு ஆதரவாக அமைந்தாலும், இதில் இடர் சார்ந்த அம்சங்களும் உள்ளன. வட்டி விகிதம் அதிகமாக இருந்து, நுகர்வோர் கடனும் அதிகமாக இருந்தால் நுகர்வு மீது தாக்கம் செலுத்தும். பணவீக்கம் மற்றும் சர்வதேச பொருளாதார காரணிகளும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
முதலீடு வாய்ப்பு:
முதலீட்டாளர்கள் தங்கள் இடர் அம்சத்திற்கு ஏற்ப இந்த நிதிகளை, தங்கள் முதலீடு தொகுப்பில் நாடலாம். பொதுவாக கருப்பொருள் சார்ந்த நிதிகளுக்கு பொருந்தும் அம்சங்களை மனதில் கொள்ள வேண்டும். எஸ்.ஐ.பி., முறையில் முதலீடு செய்வதும் ஏற்றதாக இருக்கும்.

