ADDED : பிப் 04, 2024 12:58 AM

திங்களன்று, 'நிப்டி' கணிசமான ஏற்றத்தைக் கண்டது. வர்த்தகர்கள் விற்பனை என்ற தங்களுடைய நிலையை மாற்றி, வாங்குதல் என்ற நிலைக்கு சென்றதால், இந்த ஏற்றம் நடைபெற்றது என்ற செய்தி செவ்வாயன்று வெளியானது
இந்தியாவில் பெருகி வரும் மின்சார தேவை காரணமாக, மின்சார உற்பத்தி சார்ந்த நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்புகள் இருக்கின்றன என்ற அடிப்படையில், அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை இத்துறை சார்ந்த பங்குகளில், கடந்த பன்னிரண்டு மாதங்களில் அதிகரித்துள்ளனர் என்ற செய்தியும் செவ்வாயன்று வெளியானது
அத்துடன், இந்திய பொருளாதாரம் 2024 - -25 நிதியாண்டில், 7 சதவீதம் அளவிலான வளர்ச்சியைக் காணும் என, நிதி அமைச்சகம் எதிர்பார்க்கிறது என்ற செய்தியும் செவ்வாயன்று வெளியானது
ஜனவரி மாதத்தில் கார்களின் விற்பனை, முந்தைய ஆண்டு ஜனவரியை விட, கிட்டத்தட்ட 8 சதவீதம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது என்ற கணிப்பு புதனன்று வெளியானது
இந்திய பொருளாதாரம், 2024 - --25 நிதியாண்டில், 6.50 சதவீத அளவிலான வளர்ச்சி அடையும் என்ற உலக வங்கியின் கணிப்பு செய்தியும் புதனன்று வெளியானது
வியாழனன்று, இடைக்கால பட்ஜெட் பார்லியில் தாக்கல் செய்யப்பட்டது.
வெள்ளியன்று, வர்த்தக நாளின் இடையே, சந்தை வரலாற்று உச்சத்தை அடைந்து, இறுதியில் கணிசமான ஏற்றத்துடன் நிறைவடைந்தது.
ஏப்ரல் 2023 முதல் ஜனவரி 2024 வரையிலான காலகட்டத்தில், பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை முறையே 6.10 சதவீதம் மற்றும் 4.30 சதவீதமாக அதிகரித்திருந்தது என்ற செய்தி சனிக்கிழமை வெளியானது.
வரும் வாரம்
எச்.எஸ்.பி.சி., - பி.எம்.ஐ., குறியீடு, எம் - 3 பணப்புழக்கம், இந்திய ரிசர்வ் வங்கியின் வட்டி விகித முடிவு, வங்கிகளுக்கான ரொக்க கையிருப்பு விகிதம் போன்ற இந்திய பொருளாதாரம் சார்ந்த சில தரவுகள், வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன
ஐ.எஸ்.எம்., குறியீடு, ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தின் நிகர அளவு, வேலையில்லாத நபர்களின் எண்ணிக்கை போன்ற சில அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த தரவுகளும் வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன.
கவனிக்க வேண்டியவை
கடந்த வாரம் திங்களன்று வர்த்தக நாளின் இறுதியில், 385 புள்ளிகள் அதிகரித்து நிறைவடைந்த நிப்டி, செவ்வாயன்று இறக்கம், புதனன்று ஏற்றம், வியாழனன்று சிறிய இறக்கம், வெள்ளியன்று கணிசமான ஏற்றம் மற்றும் நாளின் இடையே புதிய உச்சம் என, கணிசமான ஏற்ற இறக்கங்களை கண்டிருந்தது.
டெக்னிக்கல் அனாலிசிஸின் அடிப்படையில், நிப்டியில் ஏற்றம் தொடர்வதற்கான சூழல் நிலவுவதை போல் காட்டினாலும், ரிசர்வ் வங்கியின் வட்டி விகித முடிவுகள், உலகளாவிய செய்திகள் மற்றும் நிகழ்வுகளே சந்தையின் அடுத்த கட்ட நகர்வுகளை நிர்ணயிப்பதாக இருக்கும்.
எனவே, வர்த்தகம் செய்வோர் இவற்றின் மீது முழு கவனம் வைத்து, குறைந்த அளவில், மிகவும் குறுகிய நஷ்டம் தவிர்க்கும் ஸ்டாப்லாஸ்களை கொண்டு வர்த்தகம் செய்வதே, சிறந்ததொரு உத்தியாக இருக்கும்.
ரெசிஸ்டென்ஸ், சப்போர்ட் நிலைகள்
வாரத்தின் இறுதியில் டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில், நிப்டி ஏற்றம் அடைவதற்கு உகந்த சூழல் இருப்பதை போன்ற நிலைமை உள்ளது என்ற போதிலும், கடந்த வாரத்தில், நிப்டி கண்ட வேகமான ஏற்ற இறக்கங்களின் அடிப்படையில் பார்த்தால், வர்த்தகம் செய்வதற்கான வாய்ப்புகள் வரும் வாரத்தில் குறைவாகவே கிடைக்கும் என்றே தோன்றுகிறது.
அவ்வப்போது திசை தெரியா நிலை வந்து செல்லவும் வாய்ப்புள்ளது. வர்த்தகர்கள் இதனையும் மனதில் கொண்டே செயல்படவேண்டும்.
நிப்டியின் டெக்னிக்கல் அனாலிசிஸ் சார்ந்த தற்போதைய நிலவரம்
நிப்டி 21480, 21106 மற்றும் 20840 என்ற நிலைகளில், வாராந்திர ரீதியிலான ஆதரவையும் 22177, 22501 மற்றும் 22767 என்ற நிலைகளில், வாராந்திர ரீதியிலான தடைகளையும் டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.
நிப்டியின் ஏற்றம் தொடர்வதற்கு, தற்சமயம் உருவாகியுள்ள முக்கிய டெக்னிக்கல் திருப்புமுனை அளவான 21803 என்ற புள்ளிக்கு கீழே போகாமல் தொடர்ந்து அதிக அளவில் வர்த்தகமாக வேண்டும்.