UPDATED : ஆக 22, 2026 07:13 AM
ADDED : ஆக 22, 2026 07:12 AM

-நமது நிருபர்-
'தேசிய பங்கு சந்தை, ஜியோ பிளாட்பார்ம்ஸ், பிளிப்கார்ட், ஸெப்டோ, போன்பே' என பல நிறுவனங்கள், விரைவில் மிகப்பெரிய அளவில் பங்கு வெளியீட்டுக்கு வரப் போகின்றன. அதிலும் ஜியோ குறித்த எதிர்பார்ப்பு அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.
ஒரு செல்போன் நெட்வொர்க் நிறுவனமாக, 2016ல் அடியெடுத்து வைத்த ஜியோ நிறுவனம், பத்தே ஆண்டுகளில் 5ஜி., நெட்வொர்க் தொழில்நுட்பம், கிளவுட், செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான டிஜிட்டல் கட்டமைப்பு உள்ளிட்டவற்றை சொந்தமாக உருவாக்கும் ஒரு தொழில்நுட்ப சாம்ராஜ்யமாக மாறி உள்ளது.
குறிப்பாக, வெளிநாட்டு தொழில்நுட்பங்களை சார்ந்திருப்பதை விடுத்து, சுயமான உள்நாட்டு தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. இதற்கு துாணாக இருப்பது ஆராய்ச்சி பணிகள் தான். இதன் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளில் மட்டும் 11,303 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் இது கிட்டத்தட்ட 40 சதவீதமாகும்.
வாடிக்கையாளர்களுக்கு மொபைல் சேவை வழங்குவதுடன் மட்டும் நிற்காமல், தற்போது அந்த சேவைகளை செயல்படுத்துவதற்கு தேவையான முக்கிய தொழில்நுட்பங்களையும் தானே சொந்தமாக உருவாக்கி வருகிறது. 4ஜி மற்றும் 5ஜி சேவைகளுக்கான நெட்வொர்க் அமைப்புகள், ரேடியோ சாதனங்கள் மற்றும் மென்பொருட்கள் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளன.
அடுத்த கட்டமாக தொழிற்சாலைகள் மற்றும் பெரிய நிறுவனங்களுக்கான தொழில்நுட்ப சேவைகளிலும் தற்போது ஜியோ கவனம் செலுத்தி வருகிறது. தனியார் 5ஜி வலையமைப்பு வாயிலாக தொழிற்சாலைகளில் இயந்திரங்கள், சென்சார்கள், கண்காணிப்பு சாதனங்கள் மற்றும் தானியங்கி அமைப்புகளை ஒரே நெட்வொர்க்கில் இணைக்க முடியும். இதனுடன் கிளவுட் சேவை, இணைய பொருட்கள், சைபர் பாதுகாப்பு, நிறுவனங்களுக்கான இணைய இணைப்பு உள்ளிட்ட சேவைகளும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
மேலும், 'ஜியோபிரைன்' என்ற செயற்கை நுண்ணறிவு தளத்தையும் நிறுவனம் உருவாக்கியுள்ளது. நெட்வொர்க்கில் ஏற்படும் பிரச்னைகளை கண்டறிதல், பயன்பாட்டை மேம்படுத்துதல் மற்றும் சில செயல்பாடுகளை தானியங்கி முறையில் மேற்கொள்ளுதல் உள்ளிட்டவற்றுக்கு இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
மொத்தத்தில் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து தொழில்நுட்பத்தை வாங்கி பயன்படுத்தும் நிலையிலிருந்து, இந்தியாவிலேயே தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தை உருவாக்கும் நிலைக்கு தன்னையும் உயர்த்தி, நாட்டையும் உயர்த்தி உள்ளது, ஜியோ.

