இலவச யு.பி.ஐ., சவுண்ட்பே வணிகர்களுக்கு ஜியோ அறிமுகம்
இலவச யு.பி.ஐ., சவுண்ட்பே வணிகர்களுக்கு ஜியோ அறிமுகம்
ADDED : ஜன 26, 2025 12:57 AM

புதுடில்லி:'ஜியோ பாரத் 4ஜி' மொபைல் போன் வைத்திருக்கும் சிறு வணிகர்கள், யு.பி.ஐ., பரிவர்த்தனை குறித்த தகவலை, அவர்களின் போனில் ஒலி வடிவில் இலவசமாக பெறும் வசதியை, ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியை, மாநில மொழிகளில் பெறலாம்.
கடந்த ஆண்டில், 699 ரூபாய்க்கு அறிமுகமான 'ஜியோ பாரத் 4ஜி' மொபைல் போனை வைத்திருக்கும் வணிகர்கள், இந்த ஜியோசவுண்ட்-பே சேவையை பெறலாம். தற்போது பரிவர்த்தனை ஒலிபெருக்கி சாதனத்துக்கு சிறு வணிகர்கள் மாதம் 125 ரூபாய் வரை கட்டணம் செலுத்தும் நிலையில், ஜியோ பாரத் போனில் இந்த வசதியை முற்றிலும் இலவசமாக பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, சிறு வணிகர்கள் ஆண்டுக்கு 1,500 ரூபாயை சேமிக்க முடியும் என்றும்; 699 ரூபாய்க்கு ஜியோ பாரத் மொபைல் போனை வாங்குவோர், யு.பி.ஐ., பரிவர்த்தனைக்கான மற்ற கருவிகளுக்கு செலுத்தும் மாத கட்டணம் 125 ரூபாயை கணக்கிட்டால், ஆறு மாதங்களுக்குள் போனுக்கான விலையை சமன் செய்து விடலாம் என்றும் ரிலையன்ஸ் ஜியோ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

