'சாட்காம்' அலைக்கற்றை ஒதுக்கீடு ஜியோ மீண்டும் வலியுறுத்தல்
'சாட்காம்' அலைக்கற்றை ஒதுக்கீடு ஜியோ மீண்டும் வலியுறுத்தல்
ADDED : நவ 08, 2024 11:20 PM

பெங்களூரு:செயற்கைக்கோள் வழி இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு, அலைக்கற்றையை நிர்வாக ரீதியாக ஒதுக்கீடு செய்யும் முடிவை, மறுபரிசீலனை செய்யுமாறு, 'டிராய்' அமைப்பிடம், 'ரிலையன்ஸ் ஜியோ' மீண்டும் வலியுறுத்தி உள்ளது.
இந்தியாவின் தொலைதொடர்பு துறையில் பின்பற்றப்படும் ஏல ஒதுக்கீட்டு முறையை, செயற்கைக்கோள் இணைய சேவைக்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டிலும் பின்பற்ற வேண்டுமென, மத்திய அரசிடம் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட உள்நாட்டு நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன.
மாறாக, இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவையில் கால்பதிக்க ஆர்வம் காட்டும், உலகின் பெரும் கோடீஸ்வரான எலான் மஸ்கின் 'ஸ்டார் லிங்க்' நிறுவனம், நிர்வாக ரீதியான ஒதுக்கீட்டை வலியுறுத்தியது. இது அம்பானி - மஸ்க் இடையே நேரடி தொழில் போட்டிக்கு வழிவகுக்குமென கூறப்பட்டது.
இந்த சூழலில், உலகளவில் பின்பற்றப்படும் நடைமுறையை பின்பற்றி, நிர்வாக ரீதியாக அலைக்கற்றை ஒதுக்கப்படும் என்றும், இதுபற்றி டிராய் அமைப்பின் கருத்துக்கள் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும், மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்திருந்தார்.
இதனிடையே, நேற்று 'டிராய்' அமைப்பு நடத்திய கலந்துரையாடலில், ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், ஸ்டார் லிங்க் உள்பட பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதில், ரிலையன்ஸ் சார்பில் பங்கேற்ற அந்நிறுவனத்தின் கொள்கை குழுவின் நிர்வாகி ரவி காந்தி, நிர்வாக ரீதியான அலைக்கற்றை ஒதுக்கீடு நியாயமற்றது, பாரபட்சமானது என்றார். ஸ்டார் லிங்க் இந்தியா சார்பில் பங்கேற்ற பர்னில் ஊர்த்வரேஷ், 'நிர்வாக ரீதியான ஒதுக்கீடு என்பது இந்தியாவின் முற்போக்கு திட்டம்' என பாராட்டு தெரிவித்தார்.