கரூர் ஜவுளி ஏற்றுமதியில் பாதிப்பு மாற்று சந்தைக்கான திட்டம் தேவை
கரூர் ஜவுளி ஏற்றுமதியில் பாதிப்பு மாற்று சந்தைக்கான திட்டம் தேவை
ADDED : ஆக 28, 2025 12:53 AM

கரூர்:'அமெரிக்காவின் வரி விதிப்பால், ஆண்டுக்கு 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி பாதிக்கும் நிலையில், மாற்று சந்தைகளில் கவனம் செலுத்த, மத்திய - மாநில அரசுகள் திட்டங்களை உருவாக்க வேண்டும்' என, கரூர் ஜவுளி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
வரி விதிப்பால், அமெரிக்க இறக்குமதியாளர்கள், இங்கிருந்து ஜவுளி பொருட்கள் வாங்குவதை நிறுத்தி வருகின்றனர்.-
உற்பத்தியில் உள்ள ஆர்டர்கள் ரத்து செய்யப்படுகின்றன.- ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு கூட மிகுந்த தள்ளுபடி கேட்கின்றனர்.- அமெரிக்க மொத்த விற்பனையாளர்களால், ஏற்கனவே வினியோகம் செய்யப்பட்ட பொருட்களுக்கு, அங்குள்ள சில்லரை விற்பனையாளர்களிடமிருந்து பணம் பெற முடியவில்லை.
இதனால், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.-
இது தொடர்ந்தால், தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. இது கரூர் பகுதியின் சமூக, பொருளாதார நிலையை கடுமையாக பாதிக்கும்.
உடனடியாக மத்திய அரசு சார்பில்,- சிறப்பு கடன் வசதி, வங்கி கடன் வரம்புகளை உயர்த்துவது போன்ற சலுகைகளை அறிவிக்க வேண்டும். பி.எப்.,- இ.எஸ்.ஐ., போன்ற- பங்களிப்புகளில் சலுகை வழங்க வேண்டும். மாநில அரசு சார்பில், -மின் கட்டணம், சாலை வரி போன்றவற்றில் சலுகை தர வேண்டும்.
அமெரிக்காவை மட்டுமே சாராமல், மாற்று சந்தைகளில் கவனம் செலுத்த மத்திய - மாநில அரசுகள் திட்டங்களை உருவாக்க வேண்டும்.- 'மார்க்கெட் ஆக்சஸ் இனிஷியேட்டிவ்' மூலம், வியாபாரிகள் வெளிநாட்டு கண்காட்சிகள், சந்தைகள் சென்று ஆர்டர்கள் பெற ஊக்குவிக்கப்பட வேண்டும்.-
புதிய சந்தைகளில் வியாபாரம் செய்யும் நிறுவனங்களுக்கு, ஏற்றுமதி அடிப்படையிலான ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.- துறை சார்ந்த ஏற்றுமதி ஊக்க திட்டங்கள் உருவாக்கி, உலகளாவிய போட்டிக்கு உதவ வேண்டும்.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிறப்பு கடன் வசதி, வங்கி கடன் வரம்புகளை உயர்த்துவது போன்ற சலுகைகளையும் அறிவிக்க வேண்டும்