கேரள அரசு கூட்டுறவு நிறுவனம் தமிழகத்தில் தேங்காய் கொள்முதல் விலை மேலும் உயர வாய்ப்பு
கேரள அரசு கூட்டுறவு நிறுவனம் தமிழகத்தில் தேங்காய் கொள்முதல் விலை மேலும் உயர வாய்ப்பு
ADDED : அக் 22, 2025 11:50 PM

உடுமலை: தமிழகத்தில் முதன்முறையாக, கேரள கூட்டுறவு நிறுவனம் தேங்காய் மற்றும் கொப்பரை கொள்முதலை நேரடியாக துவக்க உள்ளதால், தேங்காய் சார்ந்த பொருட்கள் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.
தமிழகத்தில், 4.42 லட்சம் ஹெக்டேரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு; சராசரி உற்பத்தி திறன் ஆண்டுக்கு, ஒரு ஹெக்டேருக்கு, 12,282 தேங்காயாக இருந்தது.
தென்னை சாகுபடி பரப்பு அதிகமுள்ள கோவை, திருப்பூர் மாவட்டங்களில், சில ஆண்டுகளாக தொடர் நோய் தாக்குதலால், சராசரி உற்பத்தி திறன் வெகுவாக குறைந்துள்ளது; நோய் கண்ட ஆயிரக்கணக்கான மரங்களை விவசாயிகள் வெட்டி அகற்றியுள்ளனர்.
தேவைக்கேற்ப உற்பத்தி இல்லாததால், கடந்த ஆறு மாதத்துக்கும் மேலாக, தேங்காய் மற்றும் கொப்பரை விலை உச்சத்திலேயே உள்ளது. காங்கேயம் கொப்பரை மார்க்கெட்டில், கொப்பரை கிலோ 218 ரூபாய்; தேங்காய் டன் 68,000 ரூபாயாக உள்ளது.
இந்த சந்தை அடிப்படையில், விவசாயிகளிடம் இருந்து, நேரடியாக தேங்காய் ஒன்று, 25 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுகிறது.
இவ்வாறு, தேங்காய் மற்றும் கொப்பரை விலை பல மாதங்களாக இறங்காமல் உள்ள நிலையில், கேரள மாநில கூட்டுறவு நிறுவனமான 'கேராபெட்', தமிழகத்தில் நேரடியாக தேங்காய் மற்றும் கொப்பரையை விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்நிறுவனம், தேங்காய் எண்ணெய் மற்றும் தேங்காய் சார்ந்த இதர பொருட்கள் உற்பத்திக்காக கொல்லம், கோழிக்கோடு மற்றும் கோட்டயம் பகுதியில், பெரிய உற்பத்தி ஆலைகளை நிறுவி, இயக்கி வருகிறது; 10,000க்கும் மேற்பட்ட சில்லரை விற்பனை நிலையங்கள் வாயிலாக, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்திக்கு தேவையான தேங்காய் மற்றும் கொப்பரை தட்டுப்பாடு காரணமாக, தமிழக விவசாயிகளிடையே நேரடியாக இவற்றை கொள்முதல் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
முதற்கட்டமாக திருப்பூர் மாவட்டம், உடுமலை பகுதியில், கொப்பரை உற்பத்தியாளர்கள், தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் குறித்த தகவல்களை சேகரித்துள்ளனர்.
நேரடியாக விவசாயிகளிடம் இருந்து உரித்த தேங்காய் மற்றும் கொப்பரை கொள்முதல் செய்யும் வகையில், இன்று, விவசாயிகள், தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்களுடன் 'கேராபெட்' நிறுவனத்தினர் கலந்தாய்வு நடத்துகின்றனர்.
இந்நிறுவனம் தமிழகத்தில் நேரடி கொள்முதலை துவக்கும் நிலையில், தேங்காய் மற்றும் கொப்பரை வர்த்தகத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும்; விலை மேலும் உயரும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது.

