ADDED : அக் 22, 2025 11:55 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் முண்டு மிளகாய் வற்றல் விலை அதிகரித்து, குவின்டால் அதிகபட்சமாக, 25,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி, முதுகுளத்துார், திருவாடானை, கீழக்கரை, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம், பரமக்குடி உள்ளிட்ட பகுதியில், ஆண்டுதோறும், 50,000 ஏக்கரில் முண்டு மிளகாய் சாகுபடி நடக்கிறது. முண்டு மிளகாய் வெளி மாநிலம், மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
அதிக காரத்தன்மை, பருமன், தரம் காரணமாக ராமநாதபுரம் முண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
சீசன் காலகட்டமான மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் விலை குறைவு காரணமாக சீசன் இல்லாத காலத்தில், விற்பனை செய்வதற்காக விவசாயிகள் பலர் வேளாண் விற்பனை கூட கிடங்குகளில் இருப்பு வைக்கின்றனர். தற்போது சீசன் இல்லாதது, தொடர் மழை காரணமாக சந்தைக்கும் வற்றல் வரத்து இல்லை. குளிர் பதன கிடங்குகளில் மட்டுமே இருப்பு உள்ளது.
இதன் காரணமாக, விலை உயர்ந்து சீசனில் குவின்டால், 20,000 ரூபாய் வரை விற்றது. தற்போது, 25,000 ரூபாய் உயர்ந்துள்ளது. சில்லரை விலையில் முதல் தரமான வற்றல் கிலோ, 300 ரூபாய் வரையும், விதை மிளகாய் கிலோ, 250 ரூபாய்க்கும் விலை போகிறது என வியாபாரிகள் தெரிவித்தனர்.