ஆர்டர் செய்த 10 நிமிடங்களில் வீடு வந்து சேர்கிறது லேப்டாப் க்விக் காமர்ஸ் தளங்களின் அடுத்த பாய்ச்சல்
ஆர்டர் செய்த 10 நிமிடங்களில் வீடு வந்து சேர்கிறது லேப்டாப் க்விக் காமர்ஸ் தளங்களின் அடுத்த பாய்ச்சல்
ADDED : ஜன 23, 2025 10:47 PM

புதுடில்லி:உணவுப் பொருட்கள், மளிகை பொருட்கள், மருந்து, ஸ்மார்ட்போன் ஆகியவற்றை தொடர்ந்து லேப்டாப்களும் 10 நிமிடங்களில் டெலிவரி செய்யப்படுகின்றன.
இதற்காக, க்விக் காமர்ஸ் எனப்படும் துரித ஆன்லைன் டெலிவரி தளங்களில், நிறுவனங்கள் தங்களது லேப்டாப்களை அறிமுகப்படுத்த துவங்கிஉள்ளன.
கடந்த மாதம் முதல் எச்.பி., லெனோவோ, ஏசர், ஆசூஸ் உள்ளிட்ட முன்னணி லேப்டாப் தயாரிப்பு நிறுவனங்கள், தங்களது தயாரிப்புகளை பிளிங்கிட், செப்டோ, ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் உள்ளிட்ட ஏதேனும் ஒரு தளத்தில் பட்டியலிட்டுள்ளன.
எச்.பி., நிறுவனம் தன் லேப்டாப், மானிட்டர், பிரின்டர் ஆகிவற்றை பிளிங்கிட் வாயிலாக விற்க அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
அதேபோல ஏசர் நிறுவனமும் குறிப்பிட்ட சில பகுதிகளில் அதன் லேப்டாப் உள்ளிட்ட பிற தயாரிப்புகளை செப்டோ, பிளிப்கார்ட் மினிட்ஸ் தளங்களில் பட்டியலிட்டு உள்ளது.
ஆசூஸ் மற்றும் லெனோவோ நிறுவனங்கள் ஆரம்ப கட்டமாக கீபோர்டு, மவுஸ், பிரின்டர், டேப்லெட் ஆகியவற்றை பட்டியலிட்டு உள்ளன.
டில்லி தலைநகர் பிராந்தியம், மும்பை, சென்னை மற்றும் பெங்களூரு போன்ற பெரு நகரங்களில், இவை ஆர்டர் செய்த 10 நிமிடங்களில் வீடு வந்து சேர்கின்றன.
இந்த தளங்கள் வாயிலான விற்பனை நம்பிக்கை அளிக்கக் கூடியதாக உள்ளதாகவும், நுகர்வோர் தேவை மற்றும் விருப்பத்துக்கு ஏற்ப பட்டியலிடப்படுவது விரிவுபடுத்தப்படும் என்றும் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
க்விக் காமர்ஸ் வணிகம் பிரபலமானது முதல் மக்களிடம் காத்திருப்பு மனநிலை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
இதையடுத்து, இனி வரும் காலங்களில் மின்னணு பொருட்களின் விற்பனையை அதிகரிக்கக் கூடிய திறன் படைத்துள்ளதாக க்விக் காமர்ஸ் விளங்குவதாக நிறுவனங்கள் கருதுகின்றன. அதனால், நீண்டகால கண்ணோட்டத்தில் இந்நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட தயாராகி வருகின்றன.

