இலங்கை, மொரீஷியஸ் நாடுகளில் இந்தியாவின் யு.பி.ஐ., சேவை துவக்கம்
இலங்கை, மொரீஷியஸ் நாடுகளில் இந்தியாவின் யு.பி.ஐ., சேவை துவக்கம்
ADDED : பிப் 13, 2024 05:43 AM

புதுடில்லி : யு.பி.ஐ., பணப் பரிவர்த்தனை சேவை, நேற்று இலங்கை மற்றும் மொரீஷியஸ் நாடுகளில் துவக்கி வைக்கப் பட்டது. மேலும், மொரீஷியசில் இந்தியா வின் 'ரூபே' கார்டு சேவைகளும் அறிமுகப்படுத்தப்பட்டது.
காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் மற்றும் இலங்கை அதிபர் ரனில் விக்ரமசிங்கே ஆகியோர் பங்கேற்றனர்.
இச்சேவைகளை துவக்கி வைத்த பின் பிரதமர் மோடி பேசியதாவது:
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் மூன்று நட்பு நாடுகளுக்கு இன்று ஒரு சிறப்பான நாள், ஏனெனில் இன்று நம் வரலாற்று உறவுகளை நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் இணைக்கிறோம். புதிய பின்டெக் சேவைகள் இரு நாடுகளுக்கும் உதவும் என்று நான் நம்புகிறேன்.
யு.பி.ஐ., சேவை இந்தியாவுடன் பிற நாடுகளை ஒன்றிணைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு இந்தியாவில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' என்ற கொள்கையில் கவனம் செலுத்தி வருகிறது.
இயற்கை பேரிடராக இருந்தாலும் சரி, சுகாதாரம், பொருளாதாரம் அல்லது சர்வதேச அரங்கில் ஆதரவாக இருந்தாலும் சரி, இந்தியாதான் முதலில் செயல்பட்டு வருகிறது, இது தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.
இலங்கை மற்றும் மொரீஷியஸ் நாடுகளுடனான இருதரப்பு பொருளாதார உறவுகளை இந்தியா அதிகரித்து வரும் நிலையில் தற்போது இந்த சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்விரு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் இந்திய பயணி யருக்கும், இரு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் பயணியருக்கும், யு.பி.ஐ., வாயிலாகவே பணப் பரிவர்த்தனையை ேமற்கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது.