சிறுசேரி காக்னிசன்ட் வளாகத்தில் 14 ஏக்கரில் கற்றல் மையம்
சிறுசேரி காக்னிசன்ட் வளாகத்தில் 14 ஏக்கரில் கற்றல் மையம்
ADDED : மார் 21, 2025 12:11 AM

சென்னை:'காக்னிசன்ட்' நிறுவனம், சென்னை சிறுசேரியில் உள்ள அதன் வளாகத்தில், 14 ஏக்கர் பரப்பளவில் கற்றல் மையத்தை அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் அமைக்கப்படவுள்ள இந்த மையத்தில், ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் பணியாளர்களுக்கு, நவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
கிட்டத்தட்ட 14,000 இருக்கைகளை கொண்டதாக அமைக்கப்படவுள்ள இந்த மையத்தில், ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும், ஸ்மார்ட் வகுப்பறைகள், இன்குபேட்டர் மையங்கள், வாடிக்கையாளர் அனுபவ இடங்கள், வடிவமைப்பு சிந்தனை மையங்கள், குடியிருப்பு மற்றும் நல்வாழ்வு வசதிகளும் வழங்கப்படும்.
இந்த மையம், கோவை, ஹைதராபாத், புனே, கொச்சி ஆகிய நகரங்களில் அமைக்கப்படவுள்ள கற்றல் மையங்களுக்கு உறுதுணையாக செயல்படும். மேலும், தொழில்நுட்ப நிறுவனங்கள், கல்வியாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து, புதிய ஆராய்ச்சி மற்றும் கற்றல் திட்டங்களில் பங்கெடுத்து, தொழில்துறை முன்னேற்றத்துக்கு பங்களிக்கவும் உதவியாக இருக்கும்.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.