ADDED : ஏப் 22, 2025 07:02 AM

புதுடில்லி; இந்தியாவின் தோல் பொருட்கள் மற்றும் காலணிகள் ஏற்றுமதி, கடந்த நிதியாண்டில் 25 சதவீதம் அதிகரித்து, 49,000 கோடி ரூபாயாக இருந்தது என, தோல் ஏற்றுமதி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கவுன்சில் மேலும் தெரிவித்துள்ளதாவது: காலணிகளுக்கான முக்கிய சந்தைகளான அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் தொடர்ந்து ஏற்றுமதி வலுவாக உள்ளது.
கடந்த நிதியாண்டைப் பொறுத்தவரை, ஏற்றுமதி 25 சதவீதம் அதிகரித்து 49,000 கோடி ரூபாயாக இருந்தது. இது மத்திய வர்த்தகத்துறை அமைச்சகத்தின் மதிப்பீட்டைக் காட்டிலும் 8,600 கோடி ரூபாய் அதிகமாகும். வரும் நிதியாண்டில் ஏற்றுமதி 56,000 கோடி ரூபாயை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா 10 சதவீத இறக்குமதி வரி விதித்துள்ள நிலையில், அங்குள்ள வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் காரணமாக, ஆர்டர்கள் ரத்து செய்யப்படுவது இல்லை. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.