ADDED : நவ 13, 2024 12:41 AM

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களின் முடிவில், பொதுத் துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.,யின் புதிய பாலிசி விற்பனை, கிட்டத்தட்ட 92 லட்சத்தை எட்டியுள்ளது.
முந்தைய ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில், தனிநபர் பாலிசி விற்பனை 13.77 சதவீதம் அதிகரித்ததாக, எல்.ஐ.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை, வரிக்குப் பிந்தைய லாபம் 17,469 கோடியில் இருந்து 18,082 கோடி ரூபாயாகவும்; தனிநபர் பிரீமிய வருவாய் 17.29 சதவீதம் அதிகரித்து, 29,538 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரீமிய வருமான அடிப்படையில், காப்பீட்டு சந்தையில் 61.07 சதவீத பங்களிப்புடன் எல்.ஐ.சி., தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. ஏப்ரல் - செப்டம்பரில் மொத்த சொத்து மதிப்பு 16.78 சதவீதம் உயர்ந்து, 55.40 லட்சம் கோடியாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

