எடை, அளவீடு முறைகள் சரிபார்ப்பு: 11 தனியார் நிறுவனங்களுக்கு உரிமம்
எடை, அளவீடு முறைகள் சரிபார்ப்பு: 11 தனியார் நிறுவனங்களுக்கு உரிமம்
ADDED : டிச 31, 2025 01:14 AM

புதுடில்லி:நாட்டின் அளவீட்டு முறைகளை சரிபார்க்கும் வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு புதிய நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, அரசு அங்கீகாரம் பெற்ற சோதனை மையங்கள் வாயிலாக 11 தனியார் நிறுவனங்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, 11 தனியார் மையங்களுக்கு ஜி.ஏ.டி.சி., எனப்படும் அரசு அங்கீகாரம் பெற்ற 12 சோதனை மையங்கள்,சான்றிதழ் வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், எடை மற்றும் அளவீடு சரிபார்ப்பு நெட்வொர்க் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எடை மற்றும் அளவீட்டு விதிகள் 2013ல், அண்மையில் மத்திய அரசு திருத்தங்கள் மேற்கொண்டது. அதன் அடிப்படையில், கடந்த அக்., 23ல் வெளியிட்ட அறிவிக்கையில், தகுதிவாய்ந்த தனியார் நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்ட எடை மற்றும் அளவீட்டு பரிசோதனை மையங்களாக விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
திருத்தப்பட்ட விதிகளின்படி, எடை மற்றும் அளவீடுகளுக்கான பிரிவுகள் 18 ஆக அதிகரித்துள்ளன. ஆரோக்கியம், போக்குவரத்து, எரிசக்தி, கட்டமைப்பு, நுகர்வோர் சேவைகள் ஆகியவை இவற்றில் சேர்க்கப்பட்டுள்ளன.

