மதுரை புத்தாக்க தொழில் மையம் ஒப்பந்த நிறுவனம் தேடும் சிப்காட்
மதுரை புத்தாக்க தொழில் மையம் ஒப்பந்த நிறுவனம் தேடும் சிப்காட்
ADDED : டிச 31, 2025 01:15 AM

சென்னை: மதுரையில், 24 கோடி ரூபாய் செலவில் அமைய உள்ள புத்தாக்க தொழில் மையத்தை இயக்குவதற்காக, ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்யும் பணியில், தமிழக அரசின் 'சிப்காட்' நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
தமிழக இளைஞர்களுக்கு, நான்காம் தலைமுறை தொழில்நுட்பங்களை பயிற்றுவிக்க, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைந்துள்ள சிப்காட் தொழில் பூங்காக்களில், தொழில் புத்தாக்க மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு, உயர்தர தொழில்நுட்ப உபகரணங்கள், தயாரிப்பு மேம்பாட்டு மையங்கள், முன்மாதிரி உருவாக்கும் வசதி, பயிற்சிக் கூடங்கள் போன்றவை உள்ளன. இவற்றைப் பயன்படுத்தி புத்தொழில் நிறுவனங்களும், தொழில்முனைவோரும் புதிய தயாரிப்பு உள்ளிட்ட புத்தாக்க தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
தற்போது, மதுரை மாவட்டத்தில், மதுரை அரசு ஐ.டி.ஐ., வளாகத்தில், 20,000 சதுர அடியில், 24 கோடி ரூபாய் செலவில் புத்தாக்க தொழில் மையம் அமைக்கப்பட உள்ளது. இந்த மையத்தை நிறுவி ஐந்து ஆண்டுகளுக்கு இயக்குவது, பராமரிப்பது ஆகிய பணிகளுக்கு ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்யும் முயற்சியில் சிப்காட் ஈடுபட்டுள்ளது.
இந்த புத்தாக்க மையத்தை பயன்படுத்தி, உணவு பதப்படுத்தும் தொழில், மூலிகை, ரப்பர், இலகுரக இன்ஜினியரிங் பொருட்கள் உற்பத்தி ஆகிய தொழில்களில் ஈடுபட்டுள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர், புதிய தயாரிப்புகளை உருவாக்கலாம்.

