பி.எப்., ஓய்வூதியதாரர்களின் வீடு தேடி வரும் உயிர் சான்றிதழ் அஞ்சல் துறை, இ.பி.எப்.ஓ., ஒப்பந்தம்
பி.எப்., ஓய்வூதியதாரர்களின் வீடு தேடி வரும் உயிர் சான்றிதழ் அஞ்சல் துறை, இ.பி.எப்.ஓ., ஒப்பந்தம்
ADDED : நவ 05, 2025 12:49 AM

புதுடில்லி:இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் எனப்படும் அஞ்சல் துறை வங்கி, பி.எப்., பென்ஷன்தாரர்கள் சமர்ப்பிக்க வேண்டிய உயிர் சான்றிதழை அவர்களது வீடு தேடிச்சென்று இலவசமாக வழங்க இருக்கிறது.
இதற்கான வருங்கால வைப்பு நிதி அமைப்பும், அஞ்சல் துறையும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
அதன்படி, நாடு முழுதுமுள்ள 1.65 லட்சம் அஞ்சல் அலுவலகங்கள், 3 லட்சம் அஞ்சல் சேவை அளிப்போர் மூலம், பி.எப்., ஓய்வூதியம் பெறுவோரின் வீட்டுக்கே செல்லும் தபால்காரர்கள், கைவிரல் ரேகை பதிவு, முக அடையாளம் சரிபார்ப்பு ஆகியவற்றை செய்து, டிஜிட்டல் வடிவிலான உயிர் சான்றிதழை வழங்குவர்.
இதற்கான செலவை இ.பி.எப்.ஓ., அமைப்பே ஏற்கும் என்பதால், ஓய்வூதியதாரர் கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. இதன் வாயிலாக, ஆண்டுக்கு ஒருமுறை பி.எப்., அலுவலகத்திற்கு ஓய்வூதியதாரர் நேரில் சென்று, உயிர் சான்றிதழ் சமர்ப்பிக்கும் நடைமுறை தவிர்க்கப்படும் என்று அஞ்சல் துறை, இ.பி.எப்.ஓ.,வின் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த சேவையை பெற விரும்புவோர், தங்களது பகுதி தபால்காரர் அல்லது தபால் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். தங்களது ஓய்வூதிய ஆவணங்கள், ஆதார் விபரங்களை கொடுத்து சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

