உணவு பூங்காவில் தொழில் துவங்க ரூ.10 கோடி மானியத்துடன் கடன்
உணவு பூங்காவில் தொழில் துவங்க ரூ.10 கோடி மானியத்துடன் கடன்
ADDED : டிச 18, 2024 01:50 AM

சென்னை:''தேனி, விழுப்புரம், திருச்சி ஆகிய மாவட்டங்களில், 'சிப்காட்' நிறுவனம் அமைத்துள்ள மெகா உணவு பூங்காக்களில் தொழில் துவங்குவோருக்கு, திட்டச் செலவில், 75 சதவீதம் வரை கடன் வழங்கப்படும்.
''இதற்கு, 10 கோடி ரூபாய் வரை மத்திய அரசின் மானியமும் பெற்று தரப்படும்,'' என, 'நபார்டு' வங்கியின் துணை பொது மேலாளர் ஜி.சந்தானம் தெரிவித்தார்.
தமிழகத்தில் உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க, விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம், திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, தேனி ஆகிய இடங்களில், 'மெகா புட் பார்க்' எனப்படும் மாபெரும் உணவு பூங்காக்களை, 'சிப்காட்' அமைத்துள்ளது.
அவற்றில் தொழில் துவங்குவோருக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து, தொழில்முனைவோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டத்தை, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் கீழ் செயல்படும், 'டி.என்.அபெக்ஸ்' நிறுவனம், சென்னை கிண்டியில் நேற்று நடத்தியது.
இதில், 100க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் பங்கேற்றனர். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு, அதிகாரிகள் விளக்கங்களை அளித்தனர்.
நபார்டு துணை பொது மேலாளர் சந்தானம் கூறியதாவது:
விவசாயம் சார்ந்த உணவு பதப்படுத்தும் தொழில் துவங்குவோருக்கு தேவைப்படும் கடன்களை, 'நபார்டு' வங்கி நேரடியாக வழங்கும். தொழில்முனைவோர் வழங்கும் திட்ட அறிக்கையில், மொத்த திட்ட செலவில், 75 சதவீதம் வரை கடன் வழங்கப்படும்.
இதற்கான வட்டி, 7.45 - 7.75 சதவீதம். விண்ணப்ப பரிசீலனை கட்டணமும், மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும் போது குறைவு. கடன் தொகையில், 0.25 சதவீதம் வசூலிக்கப்படும்.
உணவு பதப்படுத்தும் தொழில் துவக்க மத்திய அரசு திட்ட செலவில், 35 சதவீதம் அல்லது அதிகபட்சம், 10 கோடி ரூபாய் வரை மானியம் வழங்குகிறது. நபார்டு வங்கியில் கடன் வாங்குவோருக்கு, இந்த மானியம் பெற்று தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.