ADDED : ஜன 13, 2024 12:11 AM

சென்னை:கன மழையால் பாதிக்கப்பட்ட ஆறு மாவட்டங்களில் உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு, மூன்று லட்சம் ரூபாய் வரை, பிணையில்லாமல் கடன் வழங்கும் திட்டத்தை, 'டிக்' நிறுவனம் துவக்கியுள்ளது.
கடந்த டிச., மாதம், 'மிக்ஜாம்' புயல் வெள்ளப்பெருக்கு மற்றும் அதீத கன மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தென்காசி, திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள தொழில் நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
அந்நிறுவனங்களுக்கு, 'டிக்' எனப்படும் தமிழக தொழில் முதலீட்டு கழகம் வாயிலாக, 100 கோடி ரூபாய் வெள்ள நிவாரண கடன் வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின், டிச., 30ல் அறிவித்தார். அத்திட்டத்தின் கீழ், கடன் வழங்கும் பணியை தற்போது டிக் துவக்கியுள்ளது.
அதன்படி, ஒரு நிறுவனத்துக்கு குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாயிலிருந்து, அதிகபட்சமாக மூன்று லட்சம் ரூபாய் வரையும் கடன் வழங்கப்படுகிறது.
ஆண்டு வட்டி ஆறு சதவீதம். முதல் மூன்று மாதங்களுக்கு வட்டி மட்டும் செலுத்தினால் போதும்; பின், 18 மாதங்களில் கடனை, வட்டி மற்றும் அசலுடன் திரும்ப செலுத்தலாம்.