'கோவை நகை தொழில் பூங்காவில் லாக்கர், தீ தடுப்பு அமைப்பு அவசியம்'
'கோவை நகை தொழில் பூங்காவில் லாக்கர், தீ தடுப்பு அமைப்பு அவசியம்'
ADDED : ஏப் 03, 2025 11:55 PM

சென்னை:கோவையில் அமைக்கப்பட உள்ள தங்க நகை தொழில் பூங்காவில், லாக்கர் மற்றும் தீ தடுப்பு பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது அவசியம் என, 'சிட்கோ'விடம் ஆய்வு நிறுவனம், அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
கோவை மாவட்டத்தில், 25,000க்கும் மேற்பட்ட தங்க நகை செய்யும் பட்டறைகள் இயங்குகின்றன. அவை, முறையான பாதுகாப்பு வசதி இல்லாமல் இயங்குகின்றன.
எனவே, தொழில்முனைவோர் கோரிக்கையை ஏற்று, கோவையில், 126 கோடி ரூபாயில், நகை தொழில் பூங்கா அமைக்க, 'சிட்கோ' எனப்படும் தமிழக சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் முடிவு செய்துஉள்ளது.
அதன்படி, கோவை குறிச்சி தொழிற்பேட்டையில், 3.41 ஏக்கரில் நகை தொழில் பூங்கா அமைப்பதற்கான தொழில்நுட்ப ஆலோசனை வழங்கும் பணி, ஆர்.டி.எக்ஸ்., ஆர்க்கிடெக் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிறுவனம், நகை தொழிலில் ஈடுபட்டுள்ள நபர்களை சந்தித்து, அவர்களின் தேவைகளை கேட்டறிந்து, தொழில்நுட்ப ஆய்வு அறிக்கையை, 'சிட்கோ'விடம் வழங்கிஉள்ளது.
அதன் அடிப்படையில், நகை தொழில் பூங்காவில், நகைகளை பாதுகாக்க லாக்கர்கள், தங்க கட்டிகளை நெருப்பில் உருக்கும் போது விபத்து ஏற்படாமல் இருக்க, தீ தடுப்பு பாதுகாப்பு கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளுடன் தொழில் பூங்கா உருவாக்கப்பட வேண்டும் என, பரிந்துரை செய்துள்ளது.
அதற்கு ஏற்ப, கட்டுமான பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்யும் பணிக்கு, 'சிட்கோ' விரைவில் டெண்டர் கோர உள்ளது.