வாகன எப்.சி., கட்டணத்தை உயர்த்துவதற்கு லாரி உரிமையாளர் சங்கம் கடும் எதிர்ப்பு
வாகன எப்.சி., கட்டணத்தை உயர்த்துவதற்கு லாரி உரிமையாளர் சங்கம் கடும் எதிர்ப்பு
ADDED : பிப் 12, 2025 12:17 AM

புதுடில்லி:வாகனங்களுக்கு எப்.சி., எனும் தரச்சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான மத்திய அரசின் முடிவுக்கு, லாரி உரிமையாளர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது போக்குவரத்து செலவை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், வினியோக தொடரை பாதிக்கும் என்றும், சான்றிதழ் பெறும் நடைமுறையில் ஊழலுக்கு வழிவகுக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய சாலை போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம், வாகனங்களுக்கான தரச் சான்றிதழ் கட்டணங்களை மாற்றியமைப்பது தொடர்பான வரைவு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது.
இதில் முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
லாரி ஓட்டுநர்கள் மட்டுமல்லாது தனிநபர்களையும் பாதிக்கக்கூடிய வகையில் மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
தற்போதைய நடைமுறையில் தனிநபர் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 15 ஆண்டுகள் வரை தரச் சான்றிதழ் பெறத் தேவையில்லை. ஆனால், 8 ஆண்டுகளுக்கு பிறகே தரச் சான்றிதழ் கட்டாயமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது அனைத்து ரக வாகனங்களுக்குமான தரச்சான்றிதழ் கட்டணமும் இரு மடங்குக்கும் கூடுதலாக அதிகரிக்கப்பட உள்ளது.
குறிப்பாக மூன்று சக்கர மற்றும் கனரக வாகனங்களுக்கான கட்டணம் தற்போது 3,000 ரூபாயாக உள்ள நிலையில், இது 7,000 முதல் 25,000 ரூபாயாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு இந்த அறிவிப்பை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாதபட்சத்தில், இது நாட்டின் பொருளாதாரத்தையும், சரக்கு போக்குவரத்து வினியோக தொடரையும் கடுமையாக பாதிக்கக் கூடும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

