ரூ.34,000 கோடி முதலீடுகள் மஹாராஷ்டிரா அரசு ஒப்பந்தம்
ரூ.34,000 கோடி முதலீடுகள் மஹாராஷ்டிரா அரசு ஒப்பந்தம்
ADDED : ஆக 31, 2025 01:18 AM

மும்பை,:மஹாராஷ்டிரா அரசு, பல்வேறு நிறுவனங்களுடன், 34,000 கோடி ரூபாய் மதிப்பிலான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
மும்பையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் முன்னிலையில், 34,000 கோடி ரூபாய் மதிப்பிலான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், மஹாராஷ்டிரா அரசு அதிகாரிகள் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வரும்போது, 33,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மின்னணு பொருட்கள், உருக்கு, சூரிய மின்சக்தி, மின்சார சரக்கு வாகனங்கள் மற்றும் பேருந்துகள் தயாரிப்பு உட்பட பல்வேறு துறைகளில் தொழில் துவங்க இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் வாயிலாக வடக்கு மஹாராஷ்டிரா, புனே, விதர்பா மற்றும் கொங்கன் பகுதிகளில் புதிய தொழிற்சாலைகள், துணை தொழில்கள் அமையவுள்ளன.
நிகழ்ச்சியில் தேவேந்திர பட்னவிஸ் பேசியதாவது:
மஹாராஷ்டிராவில் தொழில் துவங்குபவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசு செய்யும்.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதோடு எங்கள் பணி முடிந்ததாக நினைக்க மாட்டோம்; உற்பத்தியாளர்களுடன் மாநில அரசும் ஒரு கூட்டாளியாக இருந்து, எந்தவொரு தடங்கலும் வராமல் பார்த்துக் கொள்வோம்.
மாநில அரசு சமீபத்தில் அறிவித்துள்ள கட்டண கொள்கை வாயிலாக, ஆண்டுதோறும் மின் கட்டணம் குறையும். இது, புதிய தொழில்களுக்கு நிவாரணம் அளிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
புனே, விதர்பா, கொங்கன் பகுதிகளில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும்
ஒப்பந்தம் மேற்கொண்ட துறைகள் மின்னணு பொருட்கள் உருக்கு சூரிய மின்சக்தி மின்சார சரக்கு வாகனங்கள் பேருந்துகள்