மஹிந்திரா மின்சார கார் தொழிற்சாலை ரூ.4,500 கோடியில் புனேயில் துவக்கம்
மஹிந்திரா மின்சார கார் தொழிற்சாலை ரூ.4,500 கோடியில் புனேயில் துவக்கம்
ADDED : ஜன 09, 2025 01:58 AM

புனே:'மஹிந்திரா' நிறுவனம், புனேவில் உள்ள அதன் சாக்கன் ஆலையில், மின்சார கார் உற்பத்திக்கு, 4,500 கோடி ரூபாயில் பிரத்யேக ஆலையை துவக்கி உள்ளது.
இந்நிறுவன ஆலையை மேம்படுத்த, 2022 முதல் 2027ம் நிதியாண்டு வரை 16,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது. அதன் ஒரு பகுதியாக, இந்த புதிய ஆலை கட்டமைக்கப் பட்டுள்ளது.
88,000 சதுர மீட்டரில் கட்டமைக்கப்பட்டுள்ள ஆலையில், கார் மற்றும் பவர்டிரைன் உற்பத்திக்கு தனிப் பிரிவுகள் நிறுவப்பட்டுள்ளன.
இதில், ஆயிரக்கணக்கான ரோபோக்கள், செயற்கை நுண்ணறிவால் இயங்கும் பெயின்ட் மற்றும் பாடி ஷாப், தொழில்துறை 4.0 தொழில்நுட்பங்கள் என, பல நவீன வசதிகள் உள்ளன.
இந்த ஆலை முழுமையாக பசுமை ஆற்றலில் இயங்குவது மட்டுமின்றி, தண்ணீர் சேமிக்கவும் செய்கிறது. பாடி ஷாப் எனப்படும் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மையத்தில் மட்டும் 500 ரோபோக்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளன.
அண்மையில், அறிமுகமான 'எக்ஸ்.இ.வி., - 9இ' மற்றும் 'பி.இ., 6' ஆகிய இரண்டு மின்சார கார்களும், இந்த புதிய ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளன.
முன்னதாக இந்த கார்களின் ஆரம்ப விலை மட்டும் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது, இதன் விலை வரம்பு அறிவிக்கப்பட்டுஉள்ளது.
'எக்ஸ்.இ.வி., - 9இ' காரின் விலை 21.90 லட்சம் ரூபாய் முதல் 30.50 லட்சம் ரூபாய் வரையிலும், 'பி.இ., 6' காரின் விலை 18.90 லட்சம் ரூபாய் முதல் 26.90 லட்சம் ரூபாய் வரையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாதம் 5,000 மின்சார கார்களை விற்பனை செய்ய மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.