மக்காச்சோள இறக்குமதி விதி தளர்வு; தீவன உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்
மக்காச்சோள இறக்குமதி விதி தளர்வு; தீவன உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 23, 2026 06:25 AM

சென்னை; கால்நடை தீவன தயாரிப்புக்கு பயன்படும் முக்கிய மூலப்பொருளான மக்காச்சோளத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்த, இறக்குமதியில் தளர்வுகளை கொண்டு வர வேண்டும் என கால்நடை தீவன உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்காச்சோள உற்பத்தியை பெருக்க சிறப்பு திட்டத்தை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து கால்நடை தீவன உற்பத்தியாளர்கள் கூறியதாவது:
கோழி தீவன உற்பத்தியில் 50 சதவீதம் மக்காச்சோளம் தான் முக்கிய மூலப்பொருளாக பயன்படுகிறது. அதற்கடுத்து சோயா பயன்படுத்தப்படுகிறது. மக்காச்சோளம் கிலோவுக்கு 28 ரூபாய் வரையும், சோயா 70 ரூபாய் வரையும் உயர்ந்துள்ளது. இதனால், கால்நடை தீவனத்தின் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் எதிரொலியாக முட்டை விலை, கறிக்கோழி விலை உயர்ந்துள்ளது.
மக்காச்சோளத்தை எத்தனால் தயாரிப்புக்கும் பயன்படுத்துவதால் அதற்கான தேவை அதிகரித்துள்ளது. உள்நாட்டில் விலை உயர்ந்துள்ளதால் மக்காச்சோள இறக்குமதிக்கான வரி, மானியம் உள்ளிட்டவற்றில் தளர்வுகளை மத்திய அரசு கொண்டு வர வேண்டும். இறக்குமதிக்கு தளர்வை கொண்டு வந்தாலும் சரக்கு போக்குவரத்து கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதால், இறக்குமதியை சார்ந்து நீண்ட காலத்துக்கு இருக்க முடியாது. அதனால், மக்காச்சோளம் உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். அப்போது தான் எத்தனால் தயாரிப்புக்கும் கால்நடை தீவன தயாரிப்புக்கும் நியாயமான விலையில் மக்காச்சோளம் கிடைக்கும்.
இவ்வாறு கூறினர்.
கால்நடை தீவன
விலை உயர்வு (ரூ/கி.)
கறிக்கோழி தீவனம்
50
முட்டைக்கோழி தீவனம்
35
மாட்டுத்தீவனம்
35
