UPDATED : ஜன 13, 2024 11:56 AM
ADDED : ஜன 08, 2024 11:59 PM
சென்னை: அமெரிக்காவின் 'ஆப்பிள்' போன்று, இந்தியா சார்பிலும் உயர்தரமிக்க, மொபைல்போன் பிராண்டை உருவாக்க முதலீட்டாளர்கள் முயற்சிக்க வேண்டும் என, மத்திய மின்னணு அமைச்சக செயலர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
'எதிர்காலத்தை வேகமாக மறுகட்டமைப்பு செய்யும் எலக்ட்ரானிக்ஸ் துறை' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. இதில், மத்திய எலக்ட்ரானிக்ஸ் துறை செயலர் கிருஷ்ணன், 'டாடா சன்ஸ்' மற்றும் 'டாடா அட்வான்ஸ்ட் சிஸ்டம்ஸ்' நிறுவன தலைவர் பன்மாலி அக்ரவாலா சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
மேலும், அமெரிக்காவின் 'ராக்வெல் ஆட்டோமேஷன்' நிறுவன மூத்த துணை தலைவர் பாப் பட்டர்மோர், பிரான்சின் 'ஸ்னெய்டர் எலக்ட்ரிக்' நிறுவனத்தின் இந்திய மண்டல மேலாண் இயக்குனர் தீபக் சர்மா ஆகியோர் கருத்தாளர்களாக பங்கேற்றனர்.
கருத்தரங்கில் மத்திய எலக்ட்ரானிக்ஸ் அமைச்சக செயலர் எஸ்.கிருஷ்ணன் பேசியதாவது:எலக்ட்ரானிக்ஸ் துறைக்கு மிகவும் முக்கிய அங்கீகாரம் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவிலான மாற்றத்தின் அடிப்படையில், எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி துறையில் முக்கிய இடத்தை பிடிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இந்த துறையில் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கிறது. இந்த வகையில், தமிழகம் எலக்ட்ரானிக்ஸ் துறைக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுகிறது. செமிகண்டக்டர் மற்றும் எலக்ட்ரானிக்சுக்கு தனி கொள்கையை வெளியிட்டுள்ளது.
முதலீட்டாளர்களுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், சர்வதேச அளவில் எலக்ட்ரானிக்ஸ் துறையில், இந்தியா முக்கிய இடத்தை பிடிக்க வேண்டும். ஆப்பிள் போன்று இந்தியாவுக்கு தனியாக பிரபலமான பிராண்டை உருவாக்க வேண்டும்.இதற்காக, பிற நாட்டு நிறுவனங்களுடன் போட்டிபோட்டு நம் தொழில்துறை முன்னேற வேண்டும். மேம்படுத் தப்பட்ட தொழில் நுட்பத்தை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.