ADDED : பிப் 21, 2024 12:51 AM

புதுடில்லி:கப்பல் துறைக்கு குறைந்த செலவில், நீண்டகால நிதியுதவியை அளிக்கும் நோக்கில், கடல்சார் மேம்பாட்டு நிதி அமைப்பை உருவாக்குவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகத்தின் செயலர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
கப்பல் துறைக்கு உள்கட்டமைப்பு அந்தஸ்தை வழங்க அரசு பரிசீலித்து வருகிறது. மேலும், குறைந்த செலவில், நீண்ட கால நிதி உதவிக்காக எம்.டி.எப்., எனப்படும், கடல்சார் மேம்பாட்டு நிதி அமைப்பை உருவாக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
மேலும், அன்னிய முதலீட்டாளர்கள், முதலீடு செய்வதற்கான மாற்று முதலீட்டு நிதி விதிமுறைகளை திருத்தவும் அரசு பரிசீலனை செய்து வருகிறது.
காப்பீட்டு நிறுவனங்களின் கப்பல் குத்தகை முதலீட்டில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்கவும், கப்பல் கட்டும் நிதி உதவிக் கொள்கையை மேலும் பத்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும் துறைமுக அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
மும்பை, கொச்சி, சென்னையில் கப்பல் கட்டுதல் மற்றும் பழுதுபார்க்கும் தளங்களை மேம்படுத்துவதற்கான முயற்சியில் அமைச்சகம் ஈடுபட்டு வருகிறது.
வருகிற 2047ம் ஆண்டுக்குள், நீலப் பொருளாதார திட்டத்தின் கீழ், கடல்சார் துறைகளில் 75 முதல் 80 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

