'மேஸி பெர்குஸன்' வழக்கு 'டாபே'க்கு சாதகமாக உத்தரவு
'மேஸி பெர்குஸன்' வழக்கு 'டாபே'க்கு சாதகமாக உத்தரவு
ADDED : அக் 19, 2024 02:46 AM

சென்னை:'மேஸி பெர்குஸன்' நிறுவன உரிமை தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் தங்களுக்கு சாதகமாக இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளதாக 'டாபே' நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த, டிராக்டர் உட்பட விவசாயக் கருவிகளை தயாரிக்கும் நிறுவனமான 'அக்கோ'வின் துணை நிறுவனம் மேஸி பெர்குஸன். அதன் பிராண்டு மற்றும் டிரேட் மார்க் ஆகியவற்றை, இரு தரப்பு ஒப்பந்தம் வாயிலாக, சென்னையைச் சேர்ந்த டிராக்டர் நிறுவனமான டாபே பயன்படுத்தி வருகிறது.
இந்தியா மட்டுமின்றி நேபாளம், இலங்கை, வங்கதேசம், பூடான் ஆகிய நாடுகளிலும் இந்த பெயரில் டாபே வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், தங்களது விதிகளை மீறியதாகக் கூறி, மேஸி பெர்குஸன் பிராண்டு மற்றும் டிரேட் மார்க் ஆகியவற்றை பயன்படுத்த அளித்த உரிம ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அக்கோ நிறுவனம் அறிவித்தது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் டாபே தரப்பில் வழக்கு தொடரப்பட்டு, அது நிலுவையில் உள்ளது.
மேஸி பெர்குஸன் பிராண்டு மற்றும் டிரேட் மார்க் பிரத்யேகமாக டாபே நிறுவனத்துக்கு சொந்தமானது என்றும்; அதை உறுதிப்படுத்தி நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கேட்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இப்பிரச்னை தொடர்பாக, அக்கோ நிறுவன பிரதிநிதிகள் டாபேயின் வணிகத்தில் தலையிடவோ, உரிமை கோரவோ இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறு, சென்னை உயர் நீதிமன்றத்தில் டாபே மனு தாக்கல் செய்தது.
அதன் அடிப்படையில், தங்களுக்கு சாதகமான உத்தரவை, கடந்த 17ம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளதாக டாபே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

