ஜெர்மனிக்கு இயந்திர ஏற்றுமதி 2024ல் நான்கு மடங்கு உயர்வு
ஜெர்மனிக்கு இயந்திர ஏற்றுமதி 2024ல் நான்கு மடங்கு உயர்வு
ADDED : பிப் 16, 2025 02:01 AM

புதுடில்லி:கடந்த ஆண்டு, இந்தியாவிலிருந்து ஜெர்மனிக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இயந்திரம் மற்றும் உதிரி பாகங்களின் மதிப்பு, நான்கு மடங்கு அதிகரித்து 35,900 கோடி ரூபாயை எட்டியுள்ளது.
மும்பையில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த 'லோகிமட் இந்தியா 2025' கண்காட்சியில் பங்கேற்ற ஜெர்மனி பொறியியல் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் நாத் இதை தெரிவித்தார். இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தில், இயந்திரத் துறை தொடர்ந்து முக்கிய பங்காற்றி வருவதாகவும் அவர் கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
கடந்த 2023ல் முதன்முறையாக ஜெர்மனிக்கான இந்திய இயந்திரங்கள் மற்றும் உதிரி பாகங்களின் ஏற்றுமதி 8,700 கோடி ரூபாயை கடந்தது. கடந்தாண்டு, இது நான்கு மடங்குக்கும் கூடுதலாக அதிகரித்து, கிட்டத்தட்ட 35,900 கோடி ரூபாயாக இருந்தது. வரும் ஆண்டுகளிலும் இதன் ஏற்றுமதி தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் தற்போது, 2.73 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதில் 32 சதவீதம் இயந்திர துறை சார்ந்ததே. 8 முதல் 10 சதவீத ஆண்டு வளர்ச்சியுடன் இந்தியா - ஜெர்மனி இடையேயான வர்த்தகம் சிறப்பான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. வரும் ஆண்டுகளிலும் இதே வளர்ச்சி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு தெரிவித்தார்.

