UPDATED : ஜன 13, 2024 11:44 AM
ADDED : ஜன 09, 2024 01:18 AM
புதுடில்லி : 'மெர்சிடிஸ் - பென்ஸ்' நிறுவனம், இந்தியாவில் நடப்பாண்டில், 200 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.நடப்பாண்டில், மூன்று மின்சார வாகனங்கள் உட்பட 12 புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளதாக, மெர்சிடிஸ் - பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி, சந்தோஷ் ஐயர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:இந்தியாவில், பென்ஸ் நிறுவனம் அதன் 30வது ஆண்டை கொண்டாடுகிறது. புனேவில் உள்ள எங்கள் நிறுவனத்தின் ஆலையில், 200 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளோம். இதையடுத்து, நிறுவனத்தின் மொத்த முதலீடு தற்போது 3,000 கோடி ரூபாயாக உள்ளது.இந்த முதலீடுகள், நிறுவனத்தின் தயாரிப்பு செயல்பாடுகளுக்கும், அவற்றின் டிஜிட்டல் மயமாக்கலுக்கும் மற்றும் புதிய ஸ்டார்ட்அப்களுக்கும் பயன்படுத்தப்படும்.
கடந்த ஆண்டு, 17,408 வாகனங்களோடு, பென்ஸ் அதன் சிறப்புமிக்க விற்பனையை பதிவு செய்தது. 12 புதிய கார் மாடல்களை, நடப்பாண்டில் அறிமுகப்படுத்த உள்ளது. தற்போது நிறுவனத்தின் மொத்த விற்பனையில், மின்சார வாகனங்களின் பங்கு, 4 சதவீதமாக உள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளில், இதை 20 முதல் 25 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.