தரவு சேமிப்புக்கு சிப் தயாரிப்பு மைக்ரோமேக்ஸ் கூட்டு
தரவு சேமிப்புக்கு சிப் தயாரிப்பு மைக்ரோமேக்ஸ் கூட்டு
ADDED : டிச 20, 2024 12:09 AM

புதுடில்லி:'மைக்ரோமேக்ஸ்' நிறுவனமும், தைவானைச் சேர்ந்த 'பிசன்' நிறுவனமும் இணைந்து, தரவு சேமிப்புக்கு தேவையான சிப்செட்களை இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்துள்ளன. இதற்காக 'மிபி' என்ற நிறுவனத்தை உருவாக்கியுள்ளன.
இதுதொடர்பாக, மைக்ரோமேக்சின் இணை நிறுவனர் ராகுல் சர்மா தெரிவித்ததாவது:
கன்ட்ரோலர் மற்றும் சேமிப்பு சிப்கள் தயாரிப்பில், பிசன் நிறுவனம் நிபுணத்துவம் வாய்ந்தது. அந்நிறுவனத்தோடு சேர்ந்து, இந்தியாவில் தரவு சேமிப்புக்கான சிப் தயாரிப்பு மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம்.
இதற்காக உருவாக்கப்பட்டுள்ள மிபி நிறுவனத்தில், மைக்ரோமேக்சின் பங்கு 55 சதவீதமாகவும்; பிசன் நிறுவனத்தின் பங்கு 45 சதவீதமாகவும் இருக்கும். நொய்டாவில் உள்ள எங்களது ஆலையில் தயாரிப்பு பணிகள் ஏற்கனவே துவங்கியுள்ளன.
இந்த கூட்டு முயற்சியின் வாயிலாக, சர்வர்களில் தரவு சேமிப்புக்கு தேவையான சிப்செட்களை சேமிப்பதில் அதிக கவனம் செலுத்தப்படும். மேலும் ஜி.பி.யு., எனும் கிராபிக்ஸ் செயலாக்க யூனிட்டுக்கான செலவை, 10 சதவீதம் குறைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
உலகளவில், தரவு சேமிப்பு தீர்வுகளை ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே வழங்குகின்றன. அவை அனைத்துமே வெளிநாட்டு நிறுவனங்கள். இது பாதுகாப்பு சார்ந்தது என்பதால், உள்நாட்டு நிறுவனத்தின் பங்களிப்பு அவசியமானது. இந்தியாவில் தரவு சேமிப்புக்கான சிப்செட்கள் தயாரிக்கப்படுவது இதுவே முதல்முறை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள், 'மிபி' நிறுவனத்தின் முதல் சிப் வடிவமைக்கப்படும்
அடுத்த மூன்று ஆண்டுகளில் 1,000 பொறியாளர்களுக்கு, 'பிசன்' நிறுவனம் பயிற்சி அளிக்கும்.