ADDED : மே 07, 2025 11:33 PM

சென்னை:பாகிஸ்தானில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்திய நிலையில், பங்குச் சந்தையில் ராணுவ நிறுவனங்களின் பங்குகள் இரண்டிலிருந்து ஐந்து சதவீதம் வரை வீழ்ச்சி கண்டுள்ளன.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, ராணுவ நிறுவன பங்குகளின் விலை, தொடர்ச்சியாக அதிகரித்து வந்தன. போர் பயிற்சி, ராணுவ உபகரண தேவை ஆகியவற்றின் காரணமாக, ராணுவ செலவுகள் அதிகரிக்கும் என்பதால், ராணுவ நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.
இந்நிலையில், தாக்குதலுக்கு பிறகு, முக்கிய ராணுவ நிறுவனங்களின் பங்குகள், வீழ்ச்சி கண்டுள்ளன.
தேசிய பங்குச் சந்தை குறியீட்டில், 'பாரத் டைனமிக்ஸ்' நிறுவனத்தின் பங்கு விலை, 5.45 சதவீதம் குறைந்து, 1,444.50 ரூபாயிலும், 'மாஸகான் டாக் ஷிப் பில்டர்ஸ்' நிறுவனத்தின் பங்கு விலை, 5.42 சதவீதம் குறைந்து, 2,811.50 ரூபாயிலும், 'கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ்' நிறுவனத்தின் பங்கு விலை, 2.34 சதவீதம் குறைந்து, 1,790 ரூபாயிலும், 'ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ்' நிறுவனத்தின் பங்கு விலை, 0.65 சதவீதம் குறைந்து, 4,478 ரூபாயிலும், நிறைவு பெற்றது.