ராணுவ தளவாடங்கள் உற்பத்தி ரூ.1.51 லட்சம் கோடியை எட்டியது
ராணுவ தளவாடங்கள் உற்பத்தி ரூ.1.51 லட்சம் கோடியை எட்டியது
ADDED : ஆக 09, 2025 10:49 PM

புதுடில்லி:கடந்த நிதியாண்டில், ராணுவ தளவாட உற்பத்தி, 1.51 லட்சம் கோடி ரூபாயை எட்டியதாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
கடந்த 2024 - 25ம் நிதியாண்டில், நாட்டின் ராணுவ தளவாட உற்பத்தி 1.51 லட்சம் கோடி ரூபாய் என்ற சாதனை அளவை எட்டியுள்ளது.
இந்த மைல்கல், கடந்த நிதியாண்டு உற்பத்தியான 1.27 லட்சம் கோடி ரூபாயைக் காட்டிலும் 18 சதவீதம் அதிகம். 2019 - 20ம் நிதியாண்டில் இருந்த 79,07 1 கோடி ரூபாயை காட்டிலும் 90 சதவீதம் வலுவான வளர்ச்சியை குறிக்கிறது.
மொத்த உற்பத்தியில், ராணுவத் துறை நிறுவனங்கள் மற்றும் பிற பொதுத்துறை நிறுவனங்கள், 77 சதவீதம் பங்களிப்பை வழங்கியுள்ளன. தனியார் துறை நிறுவனங்கள் 23 சதவீத பங்களிப்பை அளித்துள்ளன.
கடந்த 2023 - 24ல் தனியார் துறையின் பங்களிப்பு 21 சதவீதமாக இருந்த நிலையில், கடந்த நிதியாண்டில் இரண்டு சதவீதம் அதிகரித்துள்ளது. நாட்டின் பாதுகாப்புக்கான சூழல் அமைப்பில் இத்துறை வளர்ந்து வரும் பங்கை இது பிரதிபலிக்கிறது.
இவ்வாறு தெரிவித்து உள்ளார்.