ராணுவ தளவாட உற்பத்தி இலக்கு 3 ஆண்டுகளில் ரூ.3 லட்சம் கோடி
ராணுவ தளவாட உற்பத்தி இலக்கு 3 ஆண்டுகளில் ரூ.3 லட்சம் கோடி
ADDED : டிச 11, 2025 01:20 AM

கோவை: “உள்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தியை, அடுத்த 3 ஆண்டுகளில் 3 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது,” என, மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ உற்பத்தி துறையின் தரை அமைப்புகள் இணை செயலாளர் கரிமா பகத் தெரிவித்தார்.
கோவையில் தென் மண்டல அளவிலான தொழில் தர உறுதி மாநாடு நேற்று நடந்தது. ராணுவ தளவாட பொருட்கள், உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் தர உறுதித்தன்மை, புதிய கண்டுபிடிப்புகள், ஆய்வக பரிசோதனைகள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டன.
சென்னை, பெங்களூரு, கோவையை சேர்ந்த ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனத்தினர் பங்கேற்றனர்.
மாநாட்டினை துவக்கி வைத்து, மத்திய ராணுவ உற்பத்தி துறையின் தரை அமைப்புகள் பிரிவின் இணை செயலர் கரிமா பகத் பேசியதாவது:
ராணுவ தளவாட உற்பத்தியில் பல்வேறு சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்த 2024--25ம் ஆண்டில் நாட்டின் தளவாட உற்பத்தி 1.50 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.
இதன் ஏற்றுமதி, எப்போதும் இல்லாத அளவுக்கு 24,000 கோடி ரூபாயை அடைந்துள்ளது. 2029ம் ஆண்டுக்குள் ராணுவ தளவாட உற்பத்தியை 3 லட்சம் கோடி ரூபாயாகவும், ஏற்றுமதியை 50 லட்சம் கோடி ரூபாயாகவும் அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது.
இலக்கை அடைய பங்குதாரர்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் ராணுவ தயாரிப்புகளை மேற்கொள்ள ஐடெக்ஸ், மேக் போன்ற திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
இதுவரை 14 ஆயிரம் பொருட்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உதிரி பொருட்கள் தயாரிப்பை ஊக்கப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ராணுவத்திற்கு பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், பொருட்களை தர பரிசோதனை செய்ய இணையதளம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பரிசோதனைகளை இந்த இணையத்தளத்தில் பதிவு செய்து பயன்படுத்த வேண்டியது எதிர்காலத்தில் கட்டாயமாக்கப்படலாம். அடுத்த ஒரு மாதத்தில் அரசு 6 ஆய்வகங்களை திறக்க உள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.
ரூ.1,50 லட்சம் கோடி தளவாட உற்பத்தி ரூ. 24,000 கோடி ஏற்றுமதி (2024-25 நிலவரம்)

