பஞ்சு இறக்குமதிக்கு வரி விலக்கு நீட்டிக்க கோரும் நுாற்பாலைகள்
பஞ்சு இறக்குமதிக்கு வரி விலக்கு நீட்டிக்க கோரும் நுாற்பாலைகள்
ADDED : டிச 11, 2025 01:17 AM

திருப்பூர்: பஞ்சு மகசூல் 292 லட்சம் பேல்களாக குறையுமென கணக்கிடப்பட்டுள்ளதால், பஞ்சு இறக்குமதிக்கான வரிவிலக்கு சலுகையை மேலும் நீட்டிக்க வேண்டுமென, நுாற்பாலைகள் எதிர்பார்க்கின்றன.
மத்திய பருத்தி ஆலோசனை வாரியம், ஜவுளித்துறை கமிஷனர் தலைமையில், கடந்த 8ம் தேதி கூடியது; நடப்பு பருத்தி ஆண்டின் பருத்தி வரத்து, மொத்த தேவைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
முந்தைய ஆண்டுகளை காட்டிலும், பஞ்சு மகசூல் குறையுமென கணக்கிடப்பட்டுள்ளதால், பஞ்சு இறக்குமதிக்கான வரி விலக்கு சலுகையை, மேலும் சில மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என, ஜவுளி தொழில் து றையினர் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் (டாஸ்மா) தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் கூறியதாவது:
மத்திய அரசின் பருத்தி ஆலோசனை வாரிய கூட்டத்தில், நடப்பு ஆண்டில், பருத்தி மகசூல், 292 லட்சம் பேல்களாக இருக்குமென கணக்கிடப்பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டுகளை காட்டிலும் குறைவு. கடந்தாண்டு, உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்ய ஏதுவாக, பஞ்சு இறக்குமதிக்கான வரி 11 சதவீதத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
இச்சலுகை, வரும் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது. பருத்தி பஞ்சு வரத்து குறைவை சமாளிக்க ஏதுவாக, இறக்குமதிக்கான வரிவிலக்கு சலுகையை மேலும் நீட்டிக்க வேண்டும் என, மத்திய நிதி அமைச்சருக்கு அவசர கடிதம் அனுப்பியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

