572 புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு ரூ.14.50 கோடி உதவித்தொகை அமைச்சர் அன்பரசன் தகவல்
572 புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு ரூ.14.50 கோடி உதவித்தொகை அமைச்சர் அன்பரசன் தகவல்
ADDED : டிச 04, 2025 02:58 AM

சென்னை : ''புதிய கண்டுபிடிப்பாளர்கள் 572 பேருக்கு, 14.50 கோடி ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது'' என, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் பேசினார்.
சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில், 2.34 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட தங்கும் விடுதியை, அமைச்சர் அன்பரசன் திறந்து வைத்தார்.
பின்னர், அவர் பேசியதாவது:
தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில், தங்கும் விடுதி துவங்கப்பட்டுள்ளது. புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தும் புத்தாக்க பற்று சீட்டு திட்டத்தின் கீழ், 20 புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு 35.63 லட்சம் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.
அதுபோல், இங்கு பயிற்சி பெற்று புதிய தொழில் முனைவோர்களாக மாறிய ஐந்து பெண் தொழில் முனைவோர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த நான்கரை ஆண்டுகளில் 50.19 லட்சம் பேருக்கு, தொழில் முனைவு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளில் 572 புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு 14.50 கோடி ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்வில், தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலர் அதுல் ஆனந்த், சிட்கோ நிர்வாக இயக்குநர் கார்த்திக் உட்பட பலர் பங்கேற்றனர்.

