'ஏ.ஐ.,யால் ஏற்படும் வேலை இழப்பை தடுக்க அதிக ஸ்டார்ட் அப்கள் தேவை' அமைச்சர் தியாகராஜன் கருத்து
'ஏ.ஐ.,யால் ஏற்படும் வேலை இழப்பை தடுக்க அதிக ஸ்டார்ட் அப்கள் தேவை' அமைச்சர் தியாகராஜன் கருத்து
ADDED : நவ 22, 2025 11:49 PM

கோவை: “ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அரசு முழு ஆதரவு அளிக்கிறது,” என, அமைச்சர் தியாகராஜன் தெரிவித்தார்.
கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லுாரியில் கோவை மண்டல தமிழ்நாடு தொழில்நுட்ப மையமான ஐ.டி.என்.டி., ஹப் நேற்று திறக்கப்பட்டது.
தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தியாகராஜன் திறந்து வைத்து பேசியதாவது:
புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க தமிழக தொழில்நுட்ப மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி, மதுரையை தொடர்ந்து கோவையில் துவங்கப்பட்டுள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் மனிதவளத்தை பயன்படுத்துவதை குறைத்துள்ளன.
ஏ.ஐ., தொழில்நுட்ப பயன்பாடு அதிகரித்துள்ளதால், வேலைவாய்ப்புகள் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அதிகளவிலான ஸ்டார்ட் அப்கள், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு, 2021 முதல் அறிவுசார் சொத்துகள், கண்டுபிடிப்புகள், காப்புரிமைகள் ஆகியவற்றை செயல்பாட்டில் உள்ள தயாரிப்புகளாக மாற்றவும், தேவையான வளங்களை ஒருங்கிணைக்கும் பல்வேறு திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது.
ஸ்டார்ட் அப்-களுக்கு ஆய்வகங்கள், வடிவமைப்பு வசதிகள், துல்லிய சோதனை மையங்கள், சட்ட மற்றும் தொழில்முறை வழிகாட்டல் உள்ளிட்ட முழுமையான ஆதரவு அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
கோவை மண்டல தொழில்நுட்ப மையத்துடன், ஜிக்ஷா தளத்தின் வாயிலாக 61 கல்வி நிறுவனங்கள், தொழில்முனைவோர் இணைந்து ள்ளனர். இதுவரை, ஸ்டார்ட் அப் துவங்க 1,137 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன

