அதிக கடன் வட்டியால் ஏற்றுமதி பாதிப்பு தீர்வு காண அமைச்சகங்கள் முயற்சி அன்னிய வர்த்தகத்துக்கான பொது இயக்குனர் தகவல்
அதிக கடன் வட்டியால் ஏற்றுமதி பாதிப்பு தீர்வு காண அமைச்சகங்கள் முயற்சி அன்னிய வர்த்தகத்துக்கான பொது இயக்குனர் தகவல்
ADDED : டிச 18, 2024 10:07 PM

புதுடில்லி:கடனுக்கான அதிக வட்டி விகிதங்கள், நாட்டின் ஏற்றுமதியாளர்களுக்கு தடையாக இருப்பதால், இதுகுறித்து நிதி மற்றும் வர்த்தக அமைச்சகங்கள் பேச்சு நடத்தி வருகின்றன.
இதுகுறித்து டில்லியில் அன்னிய வர்த்தகத்துக்கான பொது இயக்குனர் சந்தோஷ் குமார் சாரங்கி கூறியதாவது:
ஏற்றுமதியாளர்களைப் பாதிக்கும் அதிக கடன் வட்டி விகிதங்கள் குறித்து எடுத்துக்கூறி, வட்டியைக் குறைக்கச் செய்வதில் நிதி அமைச்சகத்துடன் வர்த்தக அமைச்சகம் கடும் போராட்டத்தை எதிர்கொண்டு உள்ளது. வட்டி சமநிலை திட்டத்தின் அவசியம் குறித்தும் பேசி வருகிறோம்.
உற்பத்தியில், போட்டிக்கான சூழலை பராமரிக்கவும் கடன் வட்டி குறைவாக இருக்க வேண்டியது அவசியம். நிதி நிறுவனங்கள் கடன் வழங்க அதிக மதிப்புள்ள பிணையை கேட்பதால், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், கடன் பெறுவதில் பெரும் சிரமத்தை சந்திக்கின்றன.
இது ஏற்றுமதி வளர்ச்சியையும் பாதிக்கிறது. இதுதொடர்பாக, பல ஆய்வுகள் இத்தகைய சூழல் நிலவுவதை உறுதிப்படுத்தி உள்ளன.
பிணை இல்லாத கடன், அல்லது வட்டி மானியத்தில் கடனை எம்.எஸ்.எம்.இ.,க்கள் பெறச் செய்வதில், மத்திய அரசின் செலவினத் துறையுடன் வர்த்தக அமைச்சகம் பேசி வருகிறது. கடன் வட்டி அதிகமாக இருப்பதால், மற்ற நாடுகளுடன் நம்நாட்டின் ஏற்றுமதியாளர்கள் போட்டியிடுவதில் பின்னடைவு ஏற்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தென்கிழக்கு நாடுகள் பலவற்றில், வங்கிக் கடன் அடிப்படை வட்டி விகிதம் 2.50 முதல் 3.50 சதவீதம் வரை உள்ள நிலையில், நம்நாட்டில், ரெப்போ விகிதம் 6.50 ஆக இருக்கிறது.
நிதி நிறுவனங்கள் கடனுக்காக அதிக மதிப்புள்ள பிணையை கேட்பதால், நிறுவனங்கள் கடன் பெறுவது சிரமமாகிறது
உற்பத்தியில், போட்டிக்கான சூழலை பராமரிக்க கடனுக்கான வட்டி குறைவாக இருக்க வேண்டும்
அதிக வட்டியால் மற்ற நாடுகளுடன் ஏற்றுமதியாளர்கள் போட்டியிடுவதில் பின்னடைவு ஏற்படுகிறது
வட்டியை குறைக்கச் செய்வதில், நிதி அமைச்சகத்துடன் வர்த்தக அமைச்சகம் கடும் போராட்டத்தை எதிர்கொண்டுள்ளது

