மூலப்பொருட்கள் மதிப்பில் 90 சதவிகிதம் கடன் வழங்க எம்.எஸ்.எம்.இ., வலியுறுத்தல்
மூலப்பொருட்கள் மதிப்பில் 90 சதவிகிதம் கடன் வழங்க எம்.எஸ்.எம்.இ., வலியுறுத்தல்
ADDED : நவ 04, 2025 11:41 PM

சென்னை:'கையிருப்பில் உள்ள மூலப்பொருட்கள் மதிப்பில், 90 சதவீதம் வரை கடன் வழங்க வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி உத்தரவிட வேண்டும்' என தமிழக சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
நாடு முழுதும் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் சர்வதேச போட்டியை சமாளிக்கவும், உற்பத்தி செலவை குறைக்கவும், ஊக்குவிப்பு கொள்கை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக, தமிழகத்தில் மூன்று இடங்கள் உட்பட, நாட்டின் 66 இடங்களில் தொழில்முனைவோரிடம் கருத்து கேட்கப்பட உள்ளது.
சென்னை கிண்டியில் நேற்று மாலை சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களிடம், மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அதிகாரிகள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தினர். இதில், தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
'டான்ஸ்டியா' எனப்படும் தமிழக சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க தலைவர் மோகன், பொதுச்செயலர் வாசுதேவன் ஆகியோர் கூறியதாவது:
கையிருப்பில் உள்ள மூலப்பொருட்களுக்கு வங்கிகள் கடன் வாங்கும் போது, அதன் மதிப்பில், 75 சதவீதம் வரை தான் கடன் வழங்குகின்றன.
இதை, 90 சதவீதமாக உயர்த்தி வழங்குமாறு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதற்காக, தனது கடன் கொள்கையில் ரிசர்வ் வங்கி மாறுதல் செய்ய மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும்.
சிறு, குறு நிறுவனங்களுக்கு விரைவாக பணம் கிடைக்க உதவும், 'டிரெட்ஸ்' எனப்படும் தள்ளுபடி திட்டத்தில், 250 கோடி ரூபாய்க்கு மேல் விற்றுமுதல் உள்ள அனைத்து நிறுவனங்களும் கட்டாயம் பங்கு பெற வேண்டும் என்பதை, 100 கோடி ரூபாயாக குறைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
கடன் வாங்கிய வங்கி மட்டுமின்றி எந்த வங்கியிலும் வங்கி கணக்கு துவக்க அனுமதிக்குமாறும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கையிருப்பில் உள்ள மூலப்பொருட்களின் மதிப்பில், 75 சதவீதம் வரை தான் கடன் வழங்குகின்றன. இதை, 90 சதவீதமாக உயர்த்த கோரிக்கை

