எம்.எஸ்.எம்.இ., குறைகளை களைய இணையதளம் தேவை: அசோசெம்
எம்.எஸ்.எம்.இ., குறைகளை களைய இணையதளம் தேவை: அசோசெம்
ADDED : நவ 28, 2024 10:52 PM

புதுடில்லி:சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் குறைகளை களைய, நாடு தழுவிய அளவில், ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு இணையதளம் ஏற்படுத்த வேண்டும் என, தொழில் துறை அமைப்பான 'அசோசெம்' வலியுறுத்தியுள்ளது.
சிறு, குறு, நடுத்தர தொழில்கள் சந்திக்கும் சவால்கள் தொடர்பாக, எக்ரோ பவுண்டேஷனுடன் இணைந்து அசோசெம் ஆய்வு நடத்தியது.
அதன் ஆய்வறிக்கையில் கூறியதாவது:
சிறுதொழில் நிறுவனங்கள், தங்கள் வணிகத்தை நடத்துவதில் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொள்கின்றன. அவற்றுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில், 'ஆம்புட்ஸ்மேன்' எனும் குறைதீர் நடுவர் வசதியை, சிறுதொழில்களுக்கும் ஏற்படுத்த வேண்டும்.
இந்தியா, 2047ம் ஆண்டில் வளர்ந்த நாடாக உயரும் இலக்கை எட்டுவதில், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான பாதை சிறந்ததாக இருக்க வேண்டும்.
முறைசார்ந்த, சாராத தொழில்களுக்கு மத்திய, மாநில அரசுகள், வங்கிகள், பெரு நிறுவனங்களின் ஆதரவு அவசியம்.
கம்பெனி வருமான வரியை சிறுதொழில்களுக்கு, 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்க வேண்டும். தங்கள் குறைகளுக்கு தீர்வு காண, புகார் அளிப்பதில் சிறுதொழில் நிறுவனங்கள் சிரமத்தை சந்திக்கின்றன.
இந்நிலையை மாற்ற, ஒருங்கிணைக்கப்பட்ட இணையதளத்தை அரசு துவங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகள் சார்ந்த அனைத்து புகார்களுக்கும், ஒரே இடத்தில் தீர்வு கிடைக்கும் வகையில், இந்த இணையதளத்தில் வசதி ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அசோசெம் அறிக்கை கூறியுள்ளது.

