ADDED : பிப் 19, 2025 11:58 PM

சென்னை:சென்னையில் ஆலை அமைக்க முன்னணி ஐபோன் உபகரணங்கள் தயாரிப்பாளரான ஜப்பானைச் சேர்ந்த முராட்டா மேனுபேக்சரிங் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
ஜப்பானின் கியோட்டோவை தலைமையிடமாக கொண்ட முராட்டா நிறுவனம், ஸ்மார்ட்போன், சர்வர் மற்றும் கேமிங் கன்சோல்களில் பயன்படுத்தப்படும் மல்டிலேயர் செராமிக் கெபாசிட்டர் உள்ளிட்டவை தயாரித்து வருகிறது. இதன் தயாரிப்புகளை ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், சாம்சங் ஸ்மார்ட்போன் துவங்கி, என்விடியா நிறுவனத்தின் சர்வர்கள், சோனி நிறுவனத்தின் கேமிங் கன்சோல் வரை பயன்படுத்தப்படுகின்றன.
ஏற்கனவே, அமெரிக்கா - - சீனா இடையே நிலவும் முரண்பாடுகளால், சீனாவில் இருந்து ஐபோன் தயாரிப்புகளை இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஆப்பிள் நிறுவனம் மாற்றி உள்ளது. சென்னையில் ஐபோன் தயாரிப்பு ஒப்பந்த நிறுவனமான பாக்ஸ்கான், ஐபோன் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.
இதன்படி, சென்னையில் பேக்கேஜிங் மற்றும் ஷிப்பிங் ஆலையை முராட்டா நிறுவனம் அமைக்க இருப்பதாகவும்; வரும் 2026 ஏப்ரல் முதல் இந்த ஆலை செயல்பட துவங்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

