ADDED : நவ 21, 2025 12:00 AM

நாட்டின் தொழில்துறை உற்பத்தி குறியீடான ஐ.ஐ.பி.,யை மாற்ற, மத்திய புள்ளிவிபரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் திட்டமிடுகிறது. தொழில் தரவுகளின் துல்லியத்தை உயர்த்தும் புதிய முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
புள்ளி விபரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், நாட்டின் தொழில் துறை உற்பத்திக் குறியீட்டை வெளியிட்டு வருகிறது. தற்போது பல காலமாக நடைமுறையில் உள்ள கணக்கீடு முறையை திருத்த அது முன்மொழிந்துள்ளது. தொழில் செயல்திறன் தொடர்பான தரவுகள் அதிக துல்லியத்துடன் கிடைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
உலகத்தரமே நோக்கம் ஐ.ஐ.பி., கணக்கீட்டில் தற்போது இடம்பெறும் செயலற்ற தொழிற்சாலைகள் நீக்கப்பட்டு, அதே துறையைச் சேர்ந்த செயல்படும் தொழிற்சாலைகள் சேர்க்கப்படும். இதன் வாயிலாக, இந்தியாவின் தரவு தொகுப்புத் துறை, உலகத் தரத்துடன் ஒத்துப்போகும் வகையில் மேம்படுத்தப்படும்.
தினசரி பொருளாதார செயல்பாட்டை காட்டும் முக்கிய குறியீடுகளில் ஒன்றான ஐ.ஐ.பி., தற்போது புள்ளிவிபர அமைச்சகத்தால் மாதந்தோறும் வெளியிடப்படுகிறது. சுரங்கம், உற்பத்தி மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளில் ஏற்படும் குறுகியகால மாற்றங்களை இது அளவிடுகிறது.
இந்திய பொருளாதாரத்தின் துடிப்பான செயல்பாட்டை காட்டும் முக்கிய குறியீடாக, அனைவராலும் ஐ.ஐ.பி., பார்க்கப்படுகிறது. மாதந்தோறும் வெளியிடப்படும் இரண்டு முக்கிய தரவுகளுள் இது ஒன்று. நுகர்வோர் விலைக்குறியீடான சில்லரை விலை பணவீக்கம் மற்றொன்று.
இரண்டையும் கொள்கை வகுப்பாளர்கள் முதல் பொருளாதார வல்லுநர்கள் வரை நெருக்கமாக கவனிக்கின்றனர், ஏனெனில், அவை நாட்டின் பொருளாதார ஓட்டத்தைப் புரிந்துகொள்ள உதவுகின்றன.
தொழில் உற்பத்தியில் ஏற்படும் உயர்வு அல்லது குறைவை அளவிடுவதால், இவை ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை மற்றும் அரசின் தொழில் வளர்ச்சி முடிவுகளுக்கான முக்கிய அடிப்படையாக கருதப்படுகின்றன.
தற்போது ஐ.ஐ.பி., கணக்கீட்டிற்கு, 14 ஏஜன்சிகளிலிருந்து தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. சுரங்கம், உற்பத்தி, மின்சாரம் ஆகிய மூன்று துறைகளின் 407 தயாரிப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன. இத்தரவுகள் மத்திய புள்ளிவிபரம் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகத்தின்கீழ் செயல்படும் மத்திய புள்ளிவிபர அலுவலகமான சி.எஸ்.ஓ., வாயிலாக தொகுக்கப்படுகின்றன.
மாற்றத்திற்கு பரிந்துரை புள்ளிவிபர அமைச்சகம் வெளியிட்ட மாதிரி குறிப்பின்படி, ஐ.ஐ.டி., கணக்கீட்டு முறையில் பெரிய மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. தற்போது பயன்படுத்தப்படும் 2011 - 12 அடிப்படை ஆண்டும், 2017ல் அறிமுகப்படுத்தப்பட்ட தரவு தொகுப்பு முறையும் மாற்றத்திற்குரியதாக கருதப்படுகிறது.
அந்த அடிப்படை ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில தொழிற்சாலைகள், இப்போது செயலிழந்துள்ளன அல்லது உற்பத்தி வரிசையை மாற்றியுள்ளன. ஆனால், அவை இன்னும் ஐ.ஐ.பி., கணக்கீட்டில் இடம்பெறுவதால், தரவின் துல்லியத்தில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. பரிந்துரையின்படி, இவ்வாறு செயலிழந்த தொழிற்சாலைகள் ஐ.ஐ.பி., மொத்த காரணிகளில் 8.90 சதவீத பங்களித்து வருகின்றன.
இதை சரிசெய்ய, செயல்படாத ஆலைகளை நீக்கிவிட்டு, அதே வகை தயாரிப்புகளை உற்பத்தி செய்து, தொடர்ந்து செயல்படும் தொழிற்சாலைகள் சேர்க்கப்பட வேண்டும் என்று அமைச்சகம் பரிந்துரைக்கிறது. மூன்று மாதங்கள் தொடர்ந்து உற்பத்தி தரவு இல்லையெனில் அல்லது தரவு சமர்ப்பிக்கப்படாவிடில் அந்த தொழிற்சாலை, குறியீட்டுக்கான கணக்கீட்டில் இருந்து நீக்கப்பட்டு, வேறு நிறுவனம் சேர்க்கப்படும்.
புதிய ஐ.ஐ.பி., தொடர், அடுத்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான கருத்துகளை வரும் நவ., 25 வரை அரசு வரவேற்கிறது. வளர்ந்து வரும் இந்திய தொழில் துறையின் தன்மையை பொறுத்து தொழிற்சாலைகள் மாற்றம் அவசியமாகியுள்ளது.
மேலும், ஐ.ஐ.பி.,யின் அடிப்படை ஆண்டை 2022 - 23 ஆக மாற்றும் முயற்சியிலும் அரசு உள்ளது. இது, ஜி.டி.பி., மற்றும் சில்லரை விலை பணவீக்கம் போன்ற பிற புள்ளிவிபர கணக்குகளுடனும் ஒத்துப்போகும்.
தொடர்ச்சியான தரவு ஒப்பீட்டை உறுதிசெய்ய, 12 மாத 'சப்ஸ்டிடியூஷன் பேக்டர்' பயன்படுத்தப்படும். தொழில்துறை ஆலோசனை குழுவின் பரிந்துரை மற்றும் பன்னாட்டு நிதியத்தின் ஆலோசனையுடன் இந்த வரைவு உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய தொழில் உற்பத்தி குறியீடு முறை நடைமுறைக்கு வந்தால், இந்திய தொழில் துறை குறித்த புள்ளிவிபரங்கள் மேலும் துல்லியமாகவும் நம்பகமாகவும் மாறும் என்று நம்பலாம்.
சமீபத்திய புள்ளி விபரம்
ஐ.ஐ.பி., தரவின்படி, 2025 செப்., மாதம் தொழில்துறை உற்பத்தி 4 சதவீதம்
ஆகஸ்டிலும் இதே 4 சதவீத வளர்ச்சி பதிவு. ஜூலையில் 3.50%; ஜூனில் 1.50%
2025 செப்., துறைவாரியான வளர்ச்சி
தயாரிப்பு : 4.80%
மின்சாரம் : 3.10%
சுரங்கம் : -0.40%

