கைப்பையில் நகை ஏற்றுமதி மும்பையில் புதிய வசதி மையம்
கைப்பையில் நகை ஏற்றுமதி மும்பையில் புதிய வசதி மையம்
ADDED : ஜூலை 18, 2025 11:53 PM

மும்பை:ஏற்றுமதியை அதிகரிக்கும் விதமாக, மும்பை சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில், கைப்பையில் எடுத்துச் சென்று நகைகள் ஏற்றுமதி செய்வதற்கான புதிய வசதி மையத்தை, மும்பை சுங்கத்துறையுடன் இணைந்து நவரத்தினம் மற்றும் நகை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துவங்கி உள்ளது.
இந்தியாவின் மூன்றில் இரண்டு பங்கு நவரத்தினங்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதி, மும்பை விமான நிலையம் வாயிலாக நடைபெறுகிறது. இந்நிலையில், புதிதாக திறக்கப்பட்டுள்ள வசதி மையம், மும்பை சுங்கத்துறை, மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் போலீசார், விமான நிலைய அதிகாரிகள் ஒருங்கிணைப்புடன், ஒற்றைச் சாளர முறையில் ஏற்றுமதி ஒப்புதல் பெற உதவி செய்யும்.
தனிப்பட்ட நவரத்தினங்கள், நகைகள் குறிப்பிட்ட விமான நிலையங்களில், வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை வரம்புக்கு உட்பட்டு அனுமதிக்கப்படும்.
தற்போது தனிநபர்கள் கைப்பைகளில் நகைகளை எடுத்துச் செல்லும் வசதி, கொல்கட்டா, ஜெய்ப்பூர் மற்றும் மும்பை, டில்லியில் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.